மொழி ஒரு பரந்த தோட்டம். இரண்டு கத்திரிகள், சிறிது தானியங்கள், ஒரு கேரட். போதுமான அளவு. பசியில் வீறிட்டழுகிற என் கவிதைக்கு வயிறு சின்னஞ் சிறிது. நாக்குதான் கொஞ்சம் நீளமானது
Labels
Tuesday, 8 June 2021
இதுதான் வைரல்
Tuesday, 1 June 2021
அந்திக்குப் பின்னும் நீளும் பாடவேளைகள்
சில நேரங்களில் கவிதைகளை கடைசி பக்கத்திலிருந்து வாசிப்பதுண்டு.அப்படிதான் கே.ஸ்டாலின் எழுதிய “அப்பாவின் நண்பர்” கவிதை நூலை வாசித்தேன்.
அந்த வரிசையில் மூன்றாவது கவிதையில் , தாமதமாய்ப் பள்ளிக்கு வரும் மாணவன் வகுப்பறைக்கு வெளியே தயங்கி நிற்பதைப் போல மழை விட்ட மரத்தின் இலை நுனியில் நிற்கும் துளியை தரைப் பார்க்க வைத்து இருப்பார்.வாசிப்பு முடியும் வரை அந்த துளியை நான் அவ்வப்போது நிமிர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன்.
கவிதைகள் சொல்லப்படும் தொனி, ஒரே சீரான லயத்தில் சென்றுக் கொண்டு இருக்கிறது.வழிப்போக்கர்கள்,வீ
சிறு நகரையும் கிராமத்தையும் தன் கவிதை கோட்டுச் சித்திரங்களில் இணைக்க முயற்சிக்கிறார் கே.ஸ்டாலின்.
உறவுகளை நிலத்தோடு பொருத்திப் பார்க்கும் கவிதைகள் உறவுகளை நேர்த்தியாக காட்சிப்படுத்துகின்றன.
குழந்தைகளுக்கு நேரும் துயரங்களை காண்கையில் கவிதைகள் உணர்ச்சி மீறுகின்றன.கடவுளின் கண்களையும்,காதுகளையும் ஊனப்படுத்தும் வகையில் வார்த்தைகளில் வலு சேர்க்கிறார்.
இந்த அறமும் அன்பும் நீடிக்கும் கவிதைகளை தொடர்ந்து கே.ஸ்டாலின் தர வேண்டும்.
தொகுப்பை வாசித்து முடித்த பிறகும் நகரப் பேருந்தில் இருந்து மெல்லக் குனிந்து கைஅசைப்பவளின் பூரித்த முகம் இன்னும் நிழாலடுகிறது.
Monday, 31 May 2021
யா - ஒ
நமக்குள் பல கேள்விகள் இருக்கும்.காலம்காலமாக அதற்கான விடை தேடலைத்தான் வாழ்க்கை பயணம் என்று நம்பிக் கொண்டு இருக்கிறோம்.பல விடைகள் நமக்குள்ளே இருக்கும்.நாம் கண்டடைவதில்தான் சிக்கல்.தலையில் வைத்துக் கொண்டே சீப்பைத் தேடுவது போல் ஆகிவிடும்.சில நேரங்களில் எவ்வளவு தேடினாலும் கிடைக்காத ஆழத்தில் பதில்கள் ஒளிந்து கொள்ளும்.
யாவோவும் யாவாவும் உரையாடுகிறார்கள்.நாம்தான் பார்வையாளர்கள்.வாழ்க்கையெனும் நாடகத்தின் பல காட்சிகள் கண்முன் விரிகின்றன.யாவாவின் பல பந்துகளை வாழ்க்கைக்கு வெளியே விளாசிவிட்டு தனது அடுத்த பந்துக்காக காத்திருக்கிறார் யாவோ.
வாழ்வின் நுட்பமான இடங்களை தொடும் கேள்விகளும் பதில்களும் நம்மை தெளியச் செய்கின்றன.
இளங்குடியை முடித்துவிட்டு பேசிக்கொண்டு இருக்கையில் யாவா, தேடல் குறித்து ஒரு கேள்வி கேட்க யாவோ சொல்வார் ,
//எளிமையானது யாவா எளிமையானது
தாகம் நீரைத் தேடும்
கிணறு தாகத்தைத் தேடும்//
அந்த கடைசி வரிதான் எத்தனை ஆழமானதாக இருக்கிறது!? தாகம் என்பதை மட்டும் அது குறிப்பதில்லை.அதில் எதையும் நாம் பொருத்திக் கொள்ளலாம்.
கால இட பேதங்களுக்குள் விழுந்து கிடக்கும் மனித வாழ்விற்கு ஒரு கை நீட்டுகிறார் யாவோ.
அது மீட்கலாம், மீண்டும் அதற்குள் தள்ளலாம்.
ஏனெனில் கொல்வதற்கு கொடுக்கப்பட்ட விஷம் ஒருவரைக் குணப்படுத்தி விடலாம்.குணப்படுத்தக் கொடுத்த மருந்து ஒருவரைக் கொல்லலாம்.இதையும் யாவோதான் சொல்கிறார்.
ஆழமாக சிந்திக்கையில் வார்த்தைகள் அசுர பலமடைகின்றன.
ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட்டுக்கு ஒரு பதமாக யாவோவின் ஒரு அறை இப்போது உங்கள் கன்னத்தில் விழட்டும்.
"நிசப்தம் என்பது சப்தத்தின் கள்ளக் குழந்தை"
இந்த வார்த்தைகளை நம்மிடம் சேர்த்த தோழர் சிவசங்கர் , அற்புதமான ஓவியங்களால் அதனை ஈடு செய்துள்ள தோழர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் இருவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.
Monday, 17 May 2021
இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி
தேர்தல் ஜனநாயகம் என்றொரு வார்த்தையை நாம் அடிக்கடி உபயோகப் படுத்துகிறோம். உண்மையில் அது உயிர்ப்போடுதான் இருக்கிறதா?பணம்,மதம்,சாதி எல்லாம் சேர்ந்து தாக்குதல் நிகழ்த்திய பிறகும் தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் ரத்தம் வழிய எழுந்து நிற்கும் கதாநாயகன் போல எப்படி அது பிழைத்துக்கொள்கிறது?
நம் ஒவ்வொருவர் கைகளில் இருக்கும் அந்த ஒரு வாக்குதான் உதவி செய்கிறது. உண்மையில் அது நிற்க உதவுகிறதா? இல்லை அது ஒரு பாவனையா? இறந்து போன சடலத்தை நாம் அலங்கரித்து வைத்துக் கொண்டு ஆறுதல் அடைந்துக் கொள்கிறோமா?
ஒவ்வொரு தேர்தலிலும் அதன் போக்குகளைப் பார்த்து நாம் விரக்தியடைகிறோம். வாக்கு அளிக்கும் இயந்திரம் நாம் அளித்த வாக்கை சரியாக பதிவு செய்துக் கொண்டதா என்று அதை திரும்பி பார்த்துக் கொண்டேதான் வாக்குசாவடியை விட்டு வெளியேறுகிறோம்.ஆனாலும் நம் கடைசி நம்பிக்கையாக அதுவே எஞ்சுகிறது.
இந்திய மாநில தேர்தல்களின் வரலாறுகள் கூட அந்த நம்பிக்கையைத்தான் உறுதி செய்கின்றன.1975 இல் அப்போதைய இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட அவசர காலத்தில் இருந்து கூட இந்திய ஜனநாயகம் மீண்டிருக்கிறது.
தமிழகத்திலும் கூட 356-ன்படி ஆட்சிகள் கலைக்கப்பட்டு ஜனநாயகம் மீட்கப்பட்டுள்ளது. அவை எல்லாம் தேர்தல் ஜனநாயகத்தின் சாட்சிகள்.
தேர்தல் ஜனநாயகத்தை முன்வைத்து கடந்த பத்தாண்டுகளில் இந்திய தேர்தல்களின் பின்னணியை சமூக ஆய்வு நோக்கில் விரிவாகப் பேசுகிறது "இந்திய தேர்தல்களை வெல்வது எப்படி?'' நூல்.
இந்தியா முழுக்க பல தேர்தல் பிராச்சாரங்களுக்கு உதவிய தேர்தல் ஆலோசகர் சிவம் சங்கர் சிங் எழுதிய இந்த நூலை தமிழில் இ.பா.சிந்தன் மொழிப்பெயர்த்துள்ளார்.
அவர் இந்த நூலை எவ்வாறு எழுத தொடங்கினார் என்ற அத்தியாயமே இந்திய அரசியல். தேர்தல் சூழலுக்கு கட்டியம் கூறிவிடுகிறது. பா.ஜ.க தலைவர்கள் பலருடனும் இணைந்து தேர்தல் ஆலோசகராக பணியாற்றிய அனுபவம், அந்த கட்சியின் வளர்ச்சியின் பின்ணணியை படிப் படியாக அலசி ஆராய செய்கிறது.
மோடி என்ற பிம்பம் எவ்வாறு குஜராத்தில் இருந்து பெரிதாக்கப்பட்டது என்பதற்கு விடை தருகிறார். பஞ்சாப்,மணிப்பூர்,திரிபுரா மாநிலங்களில் தேர்தல் அனுபவங்களிலிருந்து இந்தியா முழுக்க தேர்தல் நடைபெறும் ஒரு வடிவத்தை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
பிரச்சார யுக்திகள் தொழில் நுட்பத்தால் மாற்றமடைந்துள்ள நிலையை, அதன் பின்ணணிகளை அலசுகிறது.ஃபேக் செய்திகளை உருவாக்குதல், அதனை பரப்ப திட்டமிடுதல், அதில் கட்சித் தலைவர்களின் பாத்திரப் பங்களிப்பு ஆகியவற்றை விளக்குகிறது.
இந்திய சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற தேர்தல்களைப் பின்னோக்கி பார்க்க முடிகிறது.தேர்தல்,ஆட்சி அதிகாரத்தின் பின் இருக்கும் கார்ப்பரேட்களின் ஆதிக்கம் ,குறிப்பாக பிஜேபி அரசு எவ்வாறு சலுகை சார் முதலாளி அரசாக இருக்கிறது என்பதைத் தரவுகளோடு இந்நூல் முன்வைக்கிறது.
கட்சி அரசியல் தாண்டி தனி நபர்களாக மக்களுக்கு அரசியல் பணி செய்ய முன் வந்தவர்களின் முடிவை அரவிந்த் கெஜ்ரிவால், இரோம் சர்மிளா ஆகியோர் உள்ளிட்ட சிலரை முன்வைத்து பேசும் பக்கங்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பரிவோடு ஆய்வு செய்கின்றன.
இந்திய அரசியல் தேர்தலை மையமாக கொண்டே சுழல்வது.அதன் நிழல் உலகப் பின்னணியை முழுமுதலாக நாம் அறிந்து கொள்ள நூல் வழி செய்கிறது.
தனி நபரின் கடமை வாக்கு அளிப்பதோடு நிறைவுறுவதில்லை.தேசபக்தியின் உணர்ச்சியில் நம்மை கட்டிப்போட்டு வைத்துவிட்டு மேயும் கறுப்பு ஆடுகளை இது போன்ற வாசிப்புகள்தான் அடையாளம் காட்டுகின்றன. அவர்களின் திட்டங்களை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.
தேசபக்தி எல்லை மீறுகிறது
கபசுரக்குடிநீர் பாட்டிலில் கோமியத்தை நிரப்புகிறீர்கள்
மயானக் கரையில் அமர்ந்து பஜனை பாடுகிறீர்கள்
இறந்தவர்கள் எழுந்து ஒரு வரிக்கு தாளமிட்டு மீண்டும் கண்மூடிக்கொண்டதாக சிலாகிப்பு வேறு!
மரங்களில் மூக்குரசி ஆக்சிஜனைப் பெற முயற்சித்ததில்
ஏற்கனவே மாண்புமிகு வைரஸ் குடித்ததுப் போக
மிச்ச சொட்டு ரத்தமும் போகிறது
"போனால் போகட்டும்
ரத்தம் மண்ணுக்கு உயிர் கொரோனாவுக்கு!"
என்று ஆவேசமடைகிறீர்கள்
அமைதி அமைதி
நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள்
ஆய்வகங்களில் கமகமக்கிறது சாணத்தின் வாசம்!
அதோ அங்கே
நாசா விஞ்ஞானிகள்
தெறித்து ஓடுகிறார்கள்
விரட்டிப் பிடித்து பாரத் மாதாவை வாழ்த்தச் சொல்கிறீர்கள்
தேசபக்தியில் கோமாதாவுக்கே புல்லரிக்கிறது!
ஒரு புள்ளிவிவரம் 'மா' என்கிறது
மாட்டுச்சாணி சோப்புக்கும் கோமியச் சானிட்டைசருக்கும்
சந்தையில் தட்டுப்பாடு.
கெளபதியார் நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பு
கொரோனாவைத் தடுக்க வைக்கோல் மெத்தைகள்!
அதனாலென்ன
தேச பக்தர்களின் விரல்கள் வலுமிக்கவை
கூர் தீட்டினால் போதும்
ராகம் மாறாமல் சொறியத்தக்கவை!
Art : GraphicNerd
Friday, 14 May 2021
ஜி.நாகராஜன் : எழுத்தும் வாழ்வும்
Saturday, 8 May 2021
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள் - வாசுகி பாஸ்கர்
"அம்பேத்கரின் அணுகுமுறையை ,சிந்திக்கும் முறைமையை நாம் வேறோருவரையும் விட அம்பேத்கரிடம் இருந்து கற்பதே சரியானது.அதற்கு இத்தொகுப்பு உதவும்" என்று நூலின் தொகுப்பாசிரியர் வாசுகி பாஸ்கர் கூறுவது நிதர்சனம்.
"அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்". இத்தொகுப்பு நீலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.முன்னுரை என்பது ஒரு நூலுக்குள் நாம் செல்வதற்கு முன் அந்த நூலை குறித்த ஒரு அறிமுகமாகவே பெரும்பாலும் அமையும். சில நூல்களின் முன்னுரைகள் மட்டுமே வாசிப்பில் கூடுதல் கவனத்தை கேட்கக் கூடிய வகையில் பொருட்படுத்தத்தக்கதாக இருக்கும்.
அம்பேத்கர் ,அவரின் நூல்களுக்கு எழுதி இருக்கும் முன்னுரைகள் நூலின் பொருண்மைக்கு வலுச் சேர்க்கின்றன.அம்பேத்கரை அதிகம் வாசிக்காதவருக்கும் கூட அவரைப் பற்றிய வரைகோட்டை தந்து விடுகின்றன.
புத்தம் ,இந்து மதம்,சூத்திரர்கள்,சாதியை அழித்தொழித்தல்,காந்தி என அம்பேத்கரோடு அடிக்கடி வரலாற்றில் சேர்த்தே உச்சரிக்கப்படும் வார்த்தைகளின் பின் இருக்கும் அம்பேத்கரின் நிலைப்பாட்டையும் தாண்டி பல்வேறு பொருண்மைகளைப் பேசும் இந்த எழுத்தின் மூலம் ஒரு வாசகன் அம்பேத்கரை கூடுதலாக நெருங்க இத்தொகுப்பு வாய்ப்பளிக்கிறது.
பல விவகாரங்களில் அம்பேத்கர் அவரின் கருத்தில் எவ்வளவு உறுதியாக இருந்து இருக்கிறார் என்பதை உணர முடிகிறது.தலித்களுக்கான சுதந்திரத்தை அவர்கள்தான் போராடி பெற்று கொள்ள வேண்டும் .பிற அமைப்புகள் அதை முன்னெடுக்க முயலும்போது ஏற்படும் விடுதல்கள்,நிபந்தனைகளோடு அது நிறைவை அடையாத சூழலுக்கு எவ்வாறு தள்ளப்படுகிறது என்பதை அவருடைய அனுபவங்களின் மூலம் தெளிவுறுத்துகிறார்.
ஆனாலும் கூட அவர் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் தலித் மக்களுக்கான விடுதலையை பெறும் முயற்சியை முன்நகர்த்துகிறார்.
அம்பேத்கர் இந்த முன்னுரைகள், நூல்களின் மூலம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்.அதில் இன்றும் ஒரு சாதி இந்துவால் பதில் அளிக்க முடியாத கேள்விகள் பல உள்ளன.
"தீண்டப்படாதோர் கிராமத்துக்கு வெளியே ஏன் வசிக்கின்றனர்?மாட்டிறைச்சி தின்பது ஏன் தீண்டாமைக்கு இட்டுச் செல்கிறது?இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உட்கொண்டதில்லையா?பிராமணல்லா
மேலும் வாசிப்பின் போது சமகால அரசியலைச் பொருத்தி பார்ப்பது எனக்கு இயல்பான ஒன்று.அம்பேத்கரின் பல்வேறு கூற்றுகள் எதிர்காலத்தை அவர் தெளிவாக அனுமானித்துள்ளதாக உணரும் நான் கீழ்காணும் அவரின் கூற்றையும் அவ்வாறே கொள்கிறேன்.
"என்றேனும் ஒரு நாள் முஸ்லீம்கள் வகுப்பு நோக்கங்களுக்காகவும் இந்துக்கள் பொருளாதார நோக்கங்களுக்காகவும் மத்திய அரசாங்கத்தை ஒழித்துக் கட்டுவதற்கு கைகோர்ப்பது சாத்தியமே" என்கிறார்.இந்த பத்தியை இன்றைய சூழலுக்கு தனியாக நாம் விளக்க வேண்டியதில்லை.
மத்தியில் அதிகாரத்தைக் குவிக்கும் போக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே இருக்கிறது.இன்றைய பா.ஜ.க அரசு அதில் இன்னும் மோசமாகவே நடந்து வருகிறது."ஒன்றிய ஆட்சி வேண்டும்" என்று தென்னிந்தியாவில் தமிழ்நாடும் கேரளமும் உரக்கக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.
மத மாயைகளைத் தாண்டி பொருளாதார சுரண்டலை மக்கள் உணர்ந்து கொள்ளத் தொடங்கி விட்டனர்.இந்துக்கள் என்ற பெயரில் இவற்றையெல்லாம் மறைத்து விட எண்ணும் முயற்சிகள் கண்டிப்பாக எடுபடாத காலம் நெருங்கி வருகிறது.
இந்துக்கள் பொருளாதார சுரண்டலுக்கு எதிராகவும் இஸ்லாமிய சமூகம் வகுப்புவாத பெயரில் நிகழ்த்தப்படும் அநியாயங்களுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுவர் என்று நான் இக்கூற்றை சமகாலத்தின் தேவையாகப் பொருத்தி பார்க்கிறேன்.
இதுபோன்று மத்திய அரசால் மாநில பொருளாதாரம் சுரண்டப்படுதல்,பாகிஸ்தான் பிரிவினை,ரூபாய் பிரச்சனை எனப் பொதுச் சமூகத்தில் பரந்துப்பட்டு பேசப்படாத அவரின் ஆய்வு நோக்கிலான எழுத்தின் ஆளுமையையும் இத் தொகுப்பு சேர்த்தே அறிமுகம் செய்கிறது.
இவ்வாசிப்பு அம்பேத்கரின் சிந்தனையை மேலும் தேடி வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தை அறிவு தளத்தில் நிகழ்த்துகிறது.
மிகுந்த கவனத்தோடும் பொறுப்புணர்வோடும் கட்டுரைகளைத் தொகுத்துள்ள வாசுகி பாஸ்கரின் பணி, காலத்தின் கடமை.










