Saturday 8 May 2021

அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள் - வாசுகி பாஸ்கர்



 

"அம்பேத்கரின்  அணுகுமுறையை ,சிந்திக்கும் முறைமையை நாம் வேறோருவரையும் விட அம்பேத்கரிடம் இருந்து கற்பதே சரியானது.அதற்கு இத்தொகுப்பு உதவும்" என்று நூலின் தொகுப்பாசிரியர் வாசுகி பாஸ்கர் கூறுவது நிதர்சனம்.

"அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்". இத்தொகுப்பு நீலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னுரை என்பது ஒரு நூலுக்குள் நாம் செல்வதற்கு முன் அந்த நூலை குறித்த ஒரு அறிமுகமாகவே பெரும்பாலும் அமையும். சில நூல்களின் முன்னுரைகள் மட்டுமே வாசிப்பில் கூடுதல் கவனத்தை கேட்கக் கூடிய வகையில் பொருட்படுத்தத்தக்கதாக இருக்கும்.

அம்பேத்கர் ,அவரின் நூல்களுக்கு எழுதி இருக்கும் முன்னுரைகள் நூலின் பொருண்மைக்கு வலுச் சேர்க்கின்றன.அம்பேத்கரை அதிகம் வாசிக்காதவருக்கும் கூட அவரைப் பற்றிய வரைகோட்டை தந்து விடுகின்றன.

புத்தம் ,இந்து மதம்,சூத்திரர்கள்,சாதியை அழித்தொழித்தல்,காந்தி என அம்பேத்கரோடு அடிக்கடி வரலாற்றில் சேர்த்தே உச்சரிக்கப்படும் வார்த்தைகளின் பின் இருக்கும் அம்பேத்கரின் நிலைப்பாட்டையும் தாண்டி பல்வேறு பொருண்மைகளைப் பேசும் இந்த எழுத்தின் மூலம் ஒரு வாசகன் அம்பேத்கரை கூடுதலாக நெருங்க இத்தொகுப்பு வாய்ப்பளிக்கிறது.

பல விவகாரங்களில் அம்பேத்கர் அவரின் கருத்தில் எவ்வளவு உறுதியாக இருந்து இருக்கிறார் என்பதை  உணர முடிகிறது.தலித்களுக்கான சுதந்திரத்தை அவர்கள்தான் போராடி பெற்று கொள்ள வேண்டும் .பிற அமைப்புகள் அதை முன்னெடுக்க முயலும்போது ஏற்படும் விடுதல்கள்,நிபந்தனைகளோடு அது நிறைவை அடையாத சூழலுக்கு எவ்வாறு தள்ளப்படுகிறது என்பதை அவருடைய அனுபவங்களின் மூலம் தெளிவுறுத்துகிறார்.
ஆனாலும் கூட அவர் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம்  தலித் மக்களுக்கான விடுதலையை பெறும் முயற்சியை முன்நகர்த்துகிறார்.

அம்பேத்கர் இந்த முன்னுரைகள், நூல்களின் மூலம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்.அதில் இன்றும் ஒரு சாதி இந்துவால் பதில் அளிக்க முடியாத கேள்விகள் பல உள்ளன.
"தீண்டப்படாதோர் கிராமத்துக்கு வெளியே ஏன் வசிக்கின்றனர்?மாட்டிறைச்சி தின்பது ஏன் தீண்டாமைக்கு இட்டுச் செல்கிறது?இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உட்கொண்டதில்லையா?பிராமணல்லாதவர்கள் மாட்டிறைச்சி தின்பதை ஏன் கைவிட்டார்கள்?பிராமணர்களை சைவ உணவு உண்பவர்களாக ஆக்கியது எது?" எனக் கேள்விகள் நமக்குள்ளும் நீளுகின்றன.

மேலும் வாசிப்பின் போது சமகால அரசியலைச் பொருத்தி பார்ப்பது எனக்கு இயல்பான ஒன்று.அம்பேத்கரின் பல்வேறு கூற்றுகள் எதிர்காலத்தை அவர் தெளிவாக அனுமானித்துள்ளதாக உணரும் நான் கீழ்காணும் அவரின் கூற்றையும் அவ்வாறே கொள்கிறேன்.
"என்றேனும் ஒரு நாள் முஸ்லீம்கள் வகுப்பு நோக்கங்களுக்காகவும் இந்துக்கள் பொருளாதார நோக்கங்களுக்காகவும் மத்திய அரசாங்கத்தை ஒழித்துக் கட்டுவதற்கு கைகோர்ப்பது சாத்தியமே" என்கிறார்.இந்த பத்தியை இன்றைய சூழலுக்கு தனியாக நாம் விளக்க வேண்டியதில்லை.
மத்தியில் அதிகாரத்தைக் குவிக்கும் போக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே இருக்கிறது.இன்றைய பா.ஜ.க அரசு அதில் இன்னும் மோசமாகவே நடந்து வருகிறது."ஒன்றிய ஆட்சி வேண்டும்" என்று தென்னிந்தியாவில் தமிழ்நாடும் கேரளமும் உரக்கக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.
மத மாயைகளைத் தாண்டி பொருளாதார சுரண்டலை மக்கள் உணர்ந்து கொள்ளத் தொடங்கி விட்டனர்.இந்துக்கள் என்ற பெயரில் இவற்றையெல்லாம் மறைத்து விட  எண்ணும் முயற்சிகள் கண்டிப்பாக எடுபடாத காலம் நெருங்கி வருகிறது.
இந்துக்கள் பொருளாதார சுரண்டலுக்கு எதிராகவும் இஸ்லாமிய சமூகம் வகுப்புவாத பெயரில் நிகழ்த்தப்படும் அநியாயங்களுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுவர் என்று நான் இக்கூற்றை சமகாலத்தின் தேவையாகப் பொருத்தி பார்க்கிறேன்.

இதுபோன்று மத்திய அரசால் மாநில பொருளாதாரம் சுரண்டப்படுதல்,பாகிஸ்தான் பிரிவினை,ரூபாய் பிரச்சனை எனப் பொதுச் சமூகத்தில் பரந்துப்பட்டு பேசப்படாத அவரின் ஆய்வு நோக்கிலான எழுத்தின் ஆளுமையையும் இத் தொகுப்பு சேர்த்தே அறிமுகம் செய்கிறது.

இவ்வாசிப்பு அம்பேத்கரின் சிந்தனையை மேலும் தேடி வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தை அறிவு தளத்தில் நிகழ்த்துகிறது.

மிகுந்த கவனத்தோடும் பொறுப்புணர்வோடும் கட்டுரைகளைத் தொகுத்துள்ள வாசுகி பாஸ்கரின் பணி, காலத்தின் கடமை.