Monday, 5 October 2015

காதுகளற்று

நிறுத்தம் நெருங்குகையில்தான்
பேருந்துக்குள்                                                                                      
மிதக்கத் தொடங்குகிறது 

Friday, 2 October 2015

ஆறுகளில் முளைக்கும் நகர்கள்திண்ணைகள் வைத்த வீடொன்றுகூட இல்லாது போனது.
தாகமென்று எவரிடமும் கேட்க தயக்கமாய் இருக்கிறது
எல்லோர் கைககளிலும் விலைக்கு வாங்கிய கேன் வாட்டர்.

நதிக்கரையில் நாகரீகம் கண்டறிந்தவன்
நதியெங்கும் முளைத்து மிதக்கின்றன நகர்கள்.

சீர்கொண்டுவந்து சீராட்டிய தாய்மாமன்
தங்கை மகனுக்கு பீர் ஊற்றித் தருகிறான்.

வெள்ளைத்தோல் மோகத்தில் உலகக்கடைகளை அனுமதித்து
உள்ளூர் கடைகளை பூட்டிக்கொண்டிருக்கிறோம்.

ஆத்தா அப்பத்தா கைப்பக்குவமெல்லாம் அந்தகாலம்.
எல்லோர் நாக்குகளும் சுவைக்கின்றன ப்ரிட்ஜ் பக்குவத்தில்

போனதெல்லாம் போகட்டும்...
மிச்சமிருக்கும் தாய்க்கிழவிகளிடம்
நாட்டுமருந்து ரகசியம், சிறுதெய்வ வரலாறு
நல்லசோறு பக்குவமெல்லாம் கேட்டறிவோம்.
நல்லதமிழில் பிள்ளைகளுக்கு பெயரிடுவோம்.

எழவு வீட்டிலேனும் அணைத்துவைப்போம் செல்பேசியை!!
கூகுள் தமிழனெல்லாம் உள்ளூர் தமிழனாவோம்.

நுகர்வுக் கலாச்சாராத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும்
தமிழ் கலாச்சாரம் பண்பாட்டின் உச்சிமயிர்
பற்றி இழுத்து கரைசேர்க்கும் கரங்களில்
முதல்கரம் நமதென்றாகட்டும்.!!


 வலைப்பதிவர் திருவிழா-2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப் போட்டிகள்-2015 க்காகவே எழுதப்பட்டது


வகை-(4) புதுக்கவிதைப் போட்டி

முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை


இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதி கூறுகின்றேன்.

Monday, 16 June 2014

அனுபவம்

நேற்று பேருந்து பயணத்தில் பக்கத்தில் முரட்டு மீசை வாய்த்த கரடு முரடான 50 வயது மதிக்கத்தக்க மனிதர்......பேருந்தில் ஒருபுறம் இளையராஜாவின் இனிய கானங்களில் லயித்து கிடந்த வேளையில் இடையில் அவர் பேச தொடங்கினார் தானாகவே.....இந்த பாடலில் இந்த வரிகளை கேளுங்கள்....இப்ப ஒரு வயலின் மியூசிக் வரும் பாருங்க......இந்த ஹம்மிங் பாருங்க தம்பி.....#அதுவரை முரட்டு மனிதனாய் தெரிந்தவர் இசை குறித்து பேச தொடங்கியதும்....எனக்கு மடியில் விளையாடும் குழந்தை போல  தெரிய தொடங்கினார்.....இசைக்குத்தான் எத்தனை மகிமை!

Saturday, 17 May 2014

எச்சில் தோழியின் 
காக்கா கடியில் 
மிட்டாய் 
இன்னும் தித்திக்கிறது.

எச்சில் பட பட 
ஊறுகிறது
அம்மாவின் 
முலைப்பால்.

அப்பாவின் 
எச்சில் மிச்சம்
நான்.

எச்சில் தடவி 
ஒட்டிக்கொள்கின்றனர் 
இல்லறத்தில் தம்பதி!


எச்சில் கையில்
பேரன் ஊட்டும்
ஒரு வாய் சோற்றில்
நிரம்புகிறது
தாத்தாவின் வயிறு.

எதிர் வீட்டு குழந்தையின்
பறக்கும் முத்த எச்சிலில்
குளிக்கும் காற்று.

மொத்தத்தில்
நான்கில் மூன்றாய்
எச்சிலில் சுழல்கிறது
உலகம்.

எச்சிலின்றி
அமையாது அன்பு!

-எம்.ஸ்டாலின் சரவணன்,கரம்பக்குடி 

வழக்கொழிந்து போன வாழ்த்து அட்டைகள்!


       மஞ்சளும் கரும்பும் சர்க்கரையும் மட்டுமல்ல பொங்கலென்றால் வாழ்த்து அட்டைகளும் கொண்டாட்டத்தில் பங்கெடுத்தது ஒரு காலம்.
         நவீன தகவல் தொடர்பு வளர்ச்சியில் நாம் தொலைத்த சந்தோசங்களில் வாழ்த்து அட்டையும் ஒன்று.
         வண்ண வண்ண கோலபொடிகள்  அடுக்குகளில் நிறைந்து இருக்கும்.மறுபக்கத்தில் விதவிதமான வாழ்த்து அட்டைகளும் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுஇருக்கும் காட்சி இன்னும்  மாறாது  கண்களில் நிற்கிறது.
        கடைதெருவில் இருமருங்கிலும் கட்டில் போட்டு அதில் வாழ்த்து அட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுஇருக்கும்.அடை நின்று ரசித்து பார்ப்பதே தனி மகிழ்ச்சி.இயற்கை காட்சி,பொங்கல் பொங்கும் பானையும் அதை சுற்றி கரும்புமாக வரையப்பட்ட காட்சி அட்டைகள் ,திரைப்பட நடிகர் ,நடிகைகள் படங்கள் அடங்கிய அட்டை என ஒவ்வென்றும் ஒரு ரகம்.
      அந்த வருடம் வெளிவந்து ஹிட் அடித்த படங்களிலிருந்து நாயகன்,நாயகி படங்கள் அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகளை அந்தந்த  ரசிகர்களும் வாங்கி செல்வர்.அந்த வருடத்தின் சினிமா கனவுகன்னியை இப்பொழுதெல்லாம் தொலைகாட்சிகளில் சர்வே எடுத்து வெளியிடுகின்றன.வாழ்த்து அட்டைகளில் அதிகமாய் இடம்பிடித்திருக்கும் நாயகியே அந்த வருடத்திற்கான கனவுகன்னி என்று எளிதாய் நாம் புரிந்துகொள்ளலாம்.
    நமக்கு பிடித்த நடிகர் வாழ்த்து அட்டையை எல்லோருக்கும் அனுப்புவது ஒரு சிலர் என்றாலும்  நண்பர்கள்,,உறவுகளுக்கு என தனித்தனியே அவரவர் பிரியங்களுக்கு மதிப்பளித்து வாழ்த்து அட்டைகளை நாம் தேர்ந்து அனுப்பிய நாட்கள் சுகமானவை.
      தொலைபேசி வந்த பிறகு கடிததொடர்பு லேசாய் தொலைய தொடங்கியது.பொங்கலன்று ,தீபாவளியன்று விடாது கதறி கதறி ஒரு சில வார்த்தைகளில் வாழ்த்து ஒப்பிக்கப்பட்டு முடித்துக்கொள்ளப்பட்டது.
      அதன்பிறகு வந்து வந்த அலைபேசி குறுந்தகவல் அடுத்த கட்ட வாழ்த்து அட்டை அழிப்பை தொடங்கியது .இப்போது ஒட்டுமொத்தமாய் வாழ்த்து அட்டை அழித்தொழிப்பை வெற்றிகரமாக  நிகழ்த்திவிட்டன ...  வலைதள சமூக தளங்கள் வரவு.
      என் இரும்பு பெட்டியில் கொத்து கொத்தாய் வாழ்த்து அட்டைகள் இருக்கின்றன.தோழன்,தோழி,அக்கா,மாமன்,தம்பியின் கையெழுத்து வாசம் இன்னும் பெட்டிக்குள் வீசிக்கொண்டே இருக்கிறது.
    இன்னும் எங்கேனும் ஒரு கடையில் ஒரு மூலையில் சினேகா சிரித்தபடி இருக்கும் வாழ்த்து அட்டையை பார்க்கும்போது பதிலுக்கு நாமும் சிரித்தே வைக்கிறோம்

ஸ்டாலின் சரவணன்

இது எனது புதிய வலை பதிவு.இதில் அரசியல்,சமூகம்,காதல்,கவிதைகள்,கட்டுரை அனுபவங்களை பதிவிட இருக்கிறேன் நண்பர்களாகிய உங்களின் ஆதரவுடன்!