Sunday 20 June 2021

துயர நடனம்



பசியில் வீறிட்டழுதல், பசியில் சிரித்தல், பசியில் புலம்புதல், பசியில் தலைதெறிக்க ஓடுதல் என்று பசியிலிருந்து கிளர்ந்தெழுந்த கவிதைகள் மன எழுச்சியின் உச்சத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள். பதினொரு பத்திகளாகப் பிரித்து எழுதப்பட்ட அறிமுகவுரையிலிருந்து தொடங்கும் துயரத்தின் நடனம் போகப்போக சுழன்றாடுகிறது. புகைத்தபடி அட்டைப்படத்தில் பறையின்மீது நின்றாடும் அந்த மனிதன் அனாமிகாவேதான்.

உலகில் எல்லாம் பசியிலிருந்தே தொடங்குகிறது. உடல் பசி, மனப்பசி என ஏதோ ஒரு பசியின்முன் மனிதன் மண்டியிட்டே ஆகவேண்டும். அதனிடம் நீங்கள் எந்த சமாதானத்தையும் தெரிவித்து தப்பிவிட முடியாது. அதற்கு நீங்கள் தீனியிடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கும் வழியற்றவன்தான் தற்கொலைக்கு முன்வருகிறான்.

துர்மரணங்களைத் தொடர்ந்து சந்திக்கும் ஒருவனின் மனநிலை சிதைவுக்குள்ளாவது நடைமுறை. சிசுவின் மரணத்திலிருந்து பழுத்து விழும் மனிதர்கள் வரை. அனாமிகாவின் கவிதைகளில் மரண ஊர்வலத்தின்போது வழியெங்கும் சிதறிக்கிடக்கும் பூக்களின் வாசம். அத்தோடு அனாமிகா நிறுத்துவது இல்லை. உங்களை அந்த நறுமணமிக்க உடலின் அருகிலும் அழைத்துச் செல்கிறார். அதன்மீது பூசப்பட்டிருக்கும் திரவியத்தை உங்கள் நாசிக்கும் படரச் செய்கிறார். தாங்க இயலாமல் மயங்கி விழும் உங்களின் முகத்தில் புகையை ஊதிவிட்டு சிரிக்கிறார்.வார்த்தைகளின் மூர்க்கத்தில் மனம் பிறழலாம்.

பிணவறையின் வாசலில் காத்துக் கிடக்கும் இக்கவிதைகள் வகை வகையான உடல்களை தரிசிக்கச் செய்கின்றன. கண்ணீர்க் கோடுகள் விழுந்து முகத்தில் பள்ளமே வரையப்பட்டுவிடலாம். எல்லாம் தாண்டி மரணத்தின்முன் ஆடும் கால்களின் உற்சாகத்தில் மரணத்தைப் பார்க்க வைத்துவிடுகின்றன .

மதத்தைக் கேள்வி கேட்பது, தேவாலயங்களுக்குள் உயிரற்ற உடலைச் சுமந்து மட்டுமே செல்வது என்று ஒரு கலகத்தை நிறுவனமயப் படுத்தப்பட்ட அமைப்புகளின் முன் நிகழ்த்துகிறார். தேவனின் ஆலயத்திற்குள் மண்டியிட்டுப் பிரார்த்திக்க மட்டுமே செல்லாமல் துயரத்தின் பொழுதுகளின்போது  சென்று உன் மகிமையின் லட்சணத்தைப் பாரென்று அவரை  தொந்தரவுக்குள்ளாக்குவதை கவிதையின் பொறுப்புகளுக்குள் கொண்டு வருகிறார்.

தன்னிலையில் இருந்து எழுதப்பட்டதோடு பொதுமைப்படுத்தப்பட்ட  கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. ஆனாலும் தன்னிலைக் கவிதைகள் ஏற்படுத்தும் தாக்கம் அளவில்லாதது. அதிர்வுகளைத் தொடர்ந்து தந்து அதை வாழ்வின் இயல்பாக ஏற்றுக்கொள்ளச் செய்துவிடுகிறார். மனநலம் பிறழ்வது, தற்கொலைக்கு முயல்வது, மரணத்தை வரவேற்கத் தயாராவது இதெல்லாம் இயல்பின் மீறல்கள் அல்ல. எல்லாருக்குள்ளும் இவை நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

இந்த உலகம் வரையறுக்கும் புனிதங்களை உடைத்து வாழ்வின் மறுபக்கத்தைக் காட்டும் இந்த அழுக்கான கவிதைகள்,உடல் என்பது மினுமினுக்கும் தோலைத் தாண்டிய ரத்தமும் எலும்புமான உண்மையென உணர்த்துகின்றன.

துயரநடனம், 
அனாமிகா
தமிழ்வெளி வெளியீடு.