Sunday 29 May 2022

அன்றாடத்தின் அச்சாணியில் சுழலும் கதைகள்

 

நமது வாழ்வின் சாட்சியாகுபவை கதைகள். வாழ்வின் வேர்களில் இருந்து உருவப்படும் கதைகள், பசுமை மாறாமல் காலத்தால் நிலைக்கின்றன. செந்தில் ஜெகன்நாதன் தனது வாழ்வின் காலக்கடிகாரத்தில் பயணித்துத் தான் வளர்ந்த நிலத்தின் கதைகளை எழுதுவதில் அனுபவம் மிக்கவராக இருக்கிறார்.  அவரது நிலத்தைக் கதைகளில் ஆழமாக, உணர்வுமிக்கதாகப் பதிவு செய்து அவற்றைக் காலத்தில் நிலைக்கச் செய்துவிட எத்தனிக்கிறார். 

நிறைவான கதைகள் மிகுந்த தொகுப்பாக இவரின் "மழைக்கண்" இருக்கிறது. சொல்லல் முறை மற்றும் பொருண்மையைப் பொறுத்த அளவில் ஓரிரு கதைகள் மிகச் சாதாரணமானவையாகவே இருக்கின்றன, ஆனால் அவை மோசமானவையாக இல்லை என்பது ஆறுதல்.

மழைக்கண், பெருநல் உளனொருத்தி, நித்தியமானவன், காகளம் போன்ற கதைகள் செந்தில் ஜெகந்நாதனின் சிறுகதை வளத்திற்கான சான்று.

நூலின் அட்டைப்படம் பசுமையான பின்னணியில் ஒரு தாய் தன் பிள்ளைகளுடன் அமர்ந்து இருப்பதாக உள்ளது. கார்த்திகேயன் பங்காருவின் இந்தப் புகைப்படம்தான் இத்தொகுப்பின் உள்ளடக்கத்திற்கான பிரதிபலிப்பு. வேளாண் சமூகத்தில் இருந்து கதை எழுத வரும் ஒருவர் தன்னுடைய கதைகளில் நிலத்தின் புழுதியைக் கிளப்பாமல் எழுத முடியாது. பெரும்பாலான கதைகள் வேளாண் முறைகளில் இருந்து வரும் வாக்கியங்களைப் படிமமாகக் கொண்டுள்ளன.

உணர்வு என்பது கதையின் அடிநாதம். செந்தில் ஜெகன்நாதன் உணர்வின் அடியாழத்திற்குச் சென்று தொட்டுத் திரும்புகிறார். அதனால் அவரது கதைகளில் இருந்து வெக்கையும் குளிர்மையும் தீவிரத்தன்மை மாறாமல் வாசகர்களுக்கு உணர்வாகக் கடத்தப்படுகின்றன.

சினிமாவில் உதவி இயக்குநராகப் பணிபுரிபவர் என்பதால், காட்சிகளை விவரணைகளின் வழி கண்முன் கொண்டு வந்து நிறுத்த முடிகிறது. "வந்த கான்ஸ்டபிள் உடையணிந்த ஒருவரிடம் துணை நடிகை ஒருவர் ஏதோ சங்கேத பாஷையில் சைகை காட்ட, அவர் சட்டென்று திரும்பித் தனது பேண்ட் ஜிப்பை சரி செய்தார்" என்று சினிமா சூட்டிங் களத்தைப் பின்னணியாகக் கொண்ட நித்தியமானவன் கதையில் ஒரு பத்தி வரும். 



சினிமா எனும் களத்தின் அறியப்படாத பக்கங்களை வாசகன் அறிந்துகொள்ள தனது களமான சினிமா அனுபவங்களை செந்தில் ஜெகன்நாதன் பயன்படுத்திக்கொள்கிறார். சினிமாவில் வாய்ப்பு என்பது வரத்திற்கு நிகரானது. வரம் என்றாலும்கூட அதுவும் சரியான நேரத்தில், சரியானவர்களுக்கு சென்று சேர்வதும் இல்லை. அக்கதையில் அவரே கூறியதுபோல, "போலீஸாக நடிக்கவேண்டியவன் பிணமாக, பிணமாக நடிக்க வேண்டியவன் போலீஸாகவும் இங்கே நடிக்க வைக்கப்படுகிறார்கள்".

பிணமாக நடிப்பவன் எல்லாம் முடிந்த பிறகு கேமராவைப் பார்த்து மூன்று தடவை சிரிக்கவேண்டும். இது போன்ற துறைசார்ந்த பழக்கங்களைப் பிறருக்கு அறிமுகம் செய்வதற்கு செந்தில் தன்னுடைய கதைகளை ஊடகங்களாகப் பயன்படுத்திக்கொள்கிறார். ஆடிஷன் என்ற கதையும்கூட அவர் சார்ந்த சினிமா துறையைக் களமாகக் கொண்டே எழுதப்பட்டு உள்ளது.. ஆடிஷன் என்பதன் இறுதி முடிவுகள் யார் கையில் உள்ளன? அதில் ஒரு உதவி இயக்குநரின் பங்கு எதுவரை மட்டுமே இருக்கும்? இதுபோன்ற நுட்பமான இடங்களை வாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது.  

எவ்வம், நித்தியமானவன், நெருநல்உளனொருத்தி, காகளம் போன்ற தலைப்புகள் புதிதாகவும் புத்துணர்ச்சி மிக்கவையாகவும் இருக்கின்றன. "எவ்வம்" கதை, வறுமை, இயலாமை, கையறுநிலை போன்ற காரணங்களால் குழந்தைகள் மீது பெற்றோர்கள் ஏவும் வன்முறைகளைப் பேசுகிறது. குடும்பத்தில் குழந்தைகள் வெறும் பார்வையாளர்கள் அல்ல. அவர்களும் முக்கிய உறுப்பினர்களே. அவர்களை தத்தம் விருப்பதிற்கு ஏற்ப வளர்த்தெடுப்பது அடிப்படை அறங்களில் ஒன்று. அதனை முன்வைத்துச் செல்லும் கதையான எவ்வம், "உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல, அவர்கள் உங்களின் வழியாக வந்தவர்கள்" என்ற புகழ்பெற்ற கலீல் கிப்ரானின் வரிகளை எதிரொலிக்கிறது.

"முத்தத்துக்கு" கதையில் நெல்வாசம், மாம்பழவாசம் ஆகியவை கவனித்து எழுதப்பட்டு இருக்கும். ஆனாலும், இக்கதை வெறும் சம்பவங்களை வைத்தே முத்தத்துக்கு முன்னோட்டமாகப் பின்னப்பட்டுள்ளது.

ஒரு கதையின் தொடக்கம், சொல்லல் முறை, முடிவு இவற்றையெல்லாம் கச்சிதமாக வைத்துக்கொண்டு கதை எழுதும் சவாலில் செந்தில் ஜெகன்நாதன் இத்தொகுப்பில் வெற்றி பெறுகிறார். மொழி நடையில் வீண் அவசரம் காட்டப்படுவது இல்லை. நிதானமாக செல்லும் கதையில் தேவையான இடத்தில் வரும் சில வாசகங்கள் பதட்டத்தைத் தந்துவிடுகின்றன. காகளம், மழைக்கண், நெருநல் உளனொருத்தி கதைகள் வழியே தனக்கு அணுக்கமான நிலத்துக்குப் பயணிக்க வைக்கிறார். பிறந்து வளர்ந்த நிலம் என்பது அள்ள அள்ளக் குறையாத கதைகளை உடையது. ஆனால் அதன் மீச்சிறு நுணுக்கங்களையும் காலத்தில் தவறவிடாமல் பதிவு செய்திருப்பது சிறப்பு.

வெறும் கதைகளாக இவை அமையவில்லை. ஒரு கதையில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் வாசகனை குறைந்தபட்சம் தொந்தரவேனும் செய்யவேண்டும்.  அவ்வகைமையில் மழைக்கண் கதை பேசும் நுட்பங்கள் அருமையானவை. ஒரு குடும்பத்தின் பெண் நோய்மையுறும்போது அந்தக் குடும்பமே அவதியுறுகிறது. தலைமைத்துவமிக்க ஒரு ஆண் நோயுற்றால்கூட அவருக்கு ஒரு அறை, சில பாத்திரங்கள், தனிமை மட்டுமே போதுமாகிறது. இங்கு ஒரு பெண் நோயுற்றாலும் அவள் குடும்பத்தின் மைய அச்சாணியாக இருந்து கால்களை சுற்றிக்கொண்டிருக்கும் சமையல் கடமைகளை மூன்று வேளையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. அவளால் உணவு தயாரிக்கும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. இக்கதையின்மூலம் பேசப்படும் பாலின அரசியல் முக்கியமானது. வேளாண் தொழில், பலவிதமான கள ஆபத்துகளையும் உள்ளடக்கியது. ஒரு பூச்சிக்கடி, அதையொட்டிய நோய், மருத்துவமனைகள் என்று கதையின் நகர்வில் மருத்துவம் சார்ந்த அறிவியல் மற்றும் காரணகாரியப் பிழைகள் இல்லாமல் கொண்டு செல்கிறார் செந்தில் ஜெகன்நாதன். 

காகளம் கதையின் பின்னணியில் ஒரு இசைத்தட்டு சுழன்றுகொண்டே இருக்கிறது. முதலாளி-தொழிலாளி உறவின் பின் இருக்கும் உன்னதங்கள், இரண்டு கதாபாத்திரங்களையும் தகுதி மிக்கவையான மாற்றுகின்றன. பாத்திர வடிவமைப்பின் லயம் சீராக இருக்கிறது. செவ்வியல் எழுத்து எனும் களத்துக்கு இதுபோன்ற கதைகள் செந்தில் ஜெகந்நாதனை எளிதில் அழைத்துச் செல்கின்றன. மளிகைக்கடைத் தொழில், கடைச்சூழல், முதலாளி-தொழிலாளி உறவு, தொழில் துரோகம், சரிவு, இலாபம், அதனைத் தொடர்ந்து வரும் குற்ற உணர்ச்சி, குற்றவுணர்ச்சியை வெற்றியால் கடந்துபோதல் அல்லது இல்லாமல் செய்தல் என்று பல கோணங்களில் பேசப்படும் கதை இது. இந்தக் கதையின் பின்னணியில் இசைக்கப்படும் பாடல்கள், அவற்றின் தத்துவப்பின்னணியைக் கதாபாத்திரங்கள் வாழ்வோடு பொருத்திப் பார்க்கும் விதம் ஆகியவை அசரடிக்கும் எழுத்தால் வடிக்கப்பட்டு, வாசிப்பின் பரவசத்தை உறுதி செய்கின்றன.

செந்தில் ஜெகன்நாதன் தனது பெரும்பாலான கதைகளை அச்சாணியை சுழலவிட்டுத் தாய்நிலத்துக்கு நகர்த்தி சேர்த்து வைத்த உணர்வுக் கிளிஞ்சல்களைப் பொறுக்கி, மூடிவைத்த விதைகளைக் கிளர்த்தி எழுதவே விரும்புகிறார் போலும். அன்றாடங்களைப் பேசும் இவரது கதைகள், உறவுச்சிக்கலையோ உறவின் உன்னதத்தையோ பேசுகின்றன. "அன்பின் நிழல்" கதை அப்பா-மகன் உறவையும், மழைக்கண் கதை அம்மா-மகன் - அப்பா உறவையும் நெருநல் உளனொருத்தி கதை அண்ணன் - தங்கை உறவின் நீள அகலப் பரிமாணங்களையும் ஆய்வு செய்கிறது. உறவைப் போற்றுவதே இவரது கதைகளின் நிதர்சனம் என்றாலும்கூட, அதன் நிதர்சனமான நிணநீர் ஒழுகுதலையும் இவர் காட்டத் தவறுவதே இல்லை. அப்பா-மகன் உறவில் வரும் வெறுப்பு, பொருளற்றுப் போகும்போது பின்வாங்கத் தயங்காத உறவுகள் குறித்துத் தயக்கமின்றிப் பேசுவதே இத்தொகுப்பின் பலம்.

இன்னும் கூடுதலாக அசலான கதைகளை செந்தில் ஜெகன்நாதன் தருவார் என்பதற்கான நம்பிக்கையை இத்தொகுப்பு தருகிறது. தான் பணிபுரியும் களத்தை, அதன் பரிச்சயமில்லாத முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் கதைகளில் வெறும் சம்பவங்களே மேலோங்கி இருக்கின்றன. அதேநேரம் நிலத்தின்பாற்பட்டு கிளர்த்தெழுந்த கதைகளில் இவரது எழுத்தும் கதைசொல்லல் முறையும் உச்சத்தை எட்டிப் பிடிக்கின்றன. 

களம்-நிலம்-உணர்வு ஆகிய மூன்று புள்ளிகளில் இருந்து கிளைத்து எழும் இவரது கதைகள் வேரின் ஆழமும் பூவின் மலர்ச்சியும் கனியின் சுவையும் கொண்டவை. 


No comments:

Post a Comment