Tuesday, 1 June 2021

அந்திக்குப் பின்னும் நீளும் பாடவேளைகள்




சில நேரங்களில் கவிதைகளை கடைசி பக்கத்திலிருந்து வாசிப்பதுண்டு.அப்படிதான் கே.ஸ்டாலின் எழுதிய “அப்பாவின் நண்பர்” கவிதை நூலை வாசித்தேன்.

அந்த வரிசையில் மூன்றாவது கவிதையில் , தாமதமாய்ப் பள்ளிக்கு வரும் மாணவன் வகுப்பறைக்கு வெளியே தயங்கி நிற்பதைப் போல மழை விட்ட மரத்தின்  இலை நுனியில் நிற்கும் துளியை தரைப் பார்க்க வைத்து இருப்பார்.வாசிப்பு முடியும் வரை அந்த துளியை நான் அவ்வப்போது நிமிர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன்.

கவிதைகள் சொல்லப்படும் தொனி, ஒரே சீரான லயத்தில் சென்றுக் கொண்டு இருக்கிறது.வழிப்போக்கர்கள்,வீடற்றவர்கள்,சித்தாள்கள்,மதுக் கடையில் பணிபுரிபவர்கள் என பலரும் வந்து போகும் தொகுப்பில் பள்ளியிலிருந்து  சிறப்பு வகுப்பு  முடிந்தவுடன் தங்கைக்காக கால்சட்டையில்  முட்டையை பாதுகாத்துக்கொண்டு ஒடும் சிறுவன் மீதுதான் என் கவனம்.அவன் முட்டை கீழே விழுந்து விடாமல் வீடு சேர வேண்டும் என்றே மனம் பதைபதைக்கிறது.எளிய மனிதர்கள் மீது நம் கவனத்தை மேலும் குவிக்க்க் கோருகிறது இத்தொகுப்பு..குறிப்பாக சிறுவர் ,சிறுமியர்களின் வாழ்வியலில் நுழைந்து திரும்பச் செய்யும் இக்கவிதைகள் நம் பாதங்களில் புழுதி வாசத்தைக் கிளர்த்துகின்றன.

சிறு நகரையும் கிராமத்தையும் தன் கவிதை கோட்டுச் சித்திரங்களில் இணைக்க முயற்சிக்கிறார் கே.ஸ்டாலின்.

உறவுகளை நிலத்தோடு பொருத்திப் பார்க்கும் கவிதைகள் உறவுகளை நேர்த்தியாக காட்சிப்படுத்துகின்றன.

குழந்தைகளுக்கு நேரும் துயரங்களை காண்கையில் கவிதைகள் உணர்ச்சி மீறுகின்றன.கடவுளின் கண்களையும்,காதுகளையும் ஊனப்படுத்தும் வகையில்  வார்த்தைகளில் வலு சேர்க்கிறார்.


வாழ்க்கைக்குள் நீடித்து நிலைத்திருக்கும் மரணத்தை பேசும் கவிதைகள் வாசிப்பவனின் அகத்தை சலனமுறச் செய்கின்றன.வாழ்வின் இரு பக்கங்களிலும் மாறி மாறி செல்லும் பயணம் வாசிப்பாளனுக்கு தனி அனுபவத்தை தருகிறது.

இந்த அறமும் அன்பும் நீடிக்கும் கவிதைகளை தொடர்ந்து கே.ஸ்டாலின் தர வேண்டும். 

தொகுப்பை வாசித்து முடித்த பிறகும் நகரப் பேருந்தில் இருந்து மெல்லக் குனிந்து கைஅசைப்பவளின் பூரித்த முகம் இன்னும் நிழாலடுகிறது.

Monday, 31 May 2021

யா - ஒ



நமக்குள் பல கேள்விகள் இருக்கும்.காலம்காலமாக அதற்கான விடை தேடலைத்தான் வாழ்க்கை பயணம் என்று நம்பிக் கொண்டு இருக்கிறோம்.பல விடைகள் நமக்குள்ளே இருக்கும்.நாம் கண்டடைவதில்தான் சிக்கல்.தலையில் வைத்துக் கொண்டே சீப்பைத் தேடுவது போல் ஆகிவிடும்.சில நேரங்களில் எவ்வளவு தேடினாலும் கிடைக்காத ஆழத்தில் பதில்கள் ஒளிந்து கொள்ளும்.

இரண்டு பாத்திரங்களையும் நாமே வகிப்பதை விட நமக்கு வெளியே நிகழ்த்தி அதனைக் கவனிப்பது மட்டுமே நமது வேலையாக்குகிறார்கள் ஆசானும் சீடனும்.
யாவோவும் யாவாவும் உரையாடுகிறார்கள்.நாம்தான் பார்வையாளர்கள்.வாழ்க்கையெனும் நாடகத்தின் பல காட்சிகள் கண்முன் விரிகின்றன.யாவாவின் பல பந்துகளை வாழ்க்கைக்கு வெளியே விளாசிவிட்டு தனது அடுத்த பந்துக்காக காத்திருக்கிறார் யாவோ.
வாழ்வின் நுட்பமான இடங்களை தொடும் கேள்விகளும் பதில்களும் நம்மை  தெளியச் செய்கின்றன.

இளங்குடியை முடித்துவிட்டு பேசிக்கொண்டு இருக்கையில் யாவா, தேடல் குறித்து ஒரு கேள்வி கேட்க யாவோ சொல்வார் ,
//எளிமையானது யாவா எளிமையானது
தாகம் நீரைத் தேடும்
கிணறு தாகத்தைத் தேடும்//

அந்த கடைசி வரிதான் எத்தனை ஆழமானதாக இருக்கிறது!? தாகம் என்பதை மட்டும் அது குறிப்பதில்லை.அதில் எதையும் நாம் பொருத்திக் கொள்ளலாம்.

கால இட பேதங்களுக்குள் விழுந்து கிடக்கும் மனித வாழ்விற்கு ஒரு கை நீட்டுகிறார் யாவோ.
அது மீட்கலாம், மீண்டும் அதற்குள் தள்ளலாம்.
ஏனெனில் கொல்வதற்கு கொடுக்கப்பட்ட விஷம் ஒருவரைக் குணப்படுத்தி விடலாம்.குணப்படுத்தக் கொடுத்த மருந்து ஒருவரைக் கொல்லலாம்.இதையும் யாவோதான் சொல்கிறார்.

ஆழமாக சிந்திக்கையில் வார்த்தைகள் அசுர பலமடைகின்றன.
ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட்டுக்கு ஒரு பதமாக யாவோவின் ஒரு அறை இப்போது உங்கள் கன்னத்தில் விழட்டும்.
"நிசப்தம் என்பது சப்தத்தின் கள்ளக் குழந்தை"



இந்த வார்த்தைகளை நம்மிடம் சேர்த்த தோழர் சிவசங்கர் , அற்புதமான ஓவியங்களால் அதனை ஈடு செய்துள்ள தோழர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் இருவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

Monday, 17 May 2021

இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி

தேர்தல் ஜனநாயகம் என்றொரு வார்த்தையை நாம் அடிக்கடி உபயோகப் படுத்துகிறோம். உண்மையில் அது உயிர்ப்போடுதான் இருக்கிறதா?பணம்,மதம்,சாதி எல்லாம் சேர்ந்து தாக்குதல் நிகழ்த்திய பிறகும் தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் ரத்தம் வழிய எழுந்து நிற்கும் கதாநாயகன் போல எப்படி அது  பிழைத்துக்கொள்கிறது?

நம் ஒவ்வொருவர் கைகளில் இருக்கும் அந்த ஒரு வாக்குதான் உதவி செய்கிறது. உண்மையில் அது நிற்க உதவுகிறதா? இல்லை அது ஒரு பாவனையா? இறந்து போன சடலத்தை நாம் அலங்கரித்து வைத்துக் கொண்டு ஆறுதல் அடைந்துக் கொள்கிறோமா?


ஒவ்வொரு தேர்தலிலும் அதன் போக்குகளைப் பார்த்து நாம் விரக்தியடைகிறோம். வாக்கு அளிக்கும் இயந்திரம் நாம் அளித்த வாக்கை சரியாக பதிவு செய்துக் கொண்டதா என்று அதை திரும்பி பார்த்துக் கொண்டேதான் வாக்குசாவடியை விட்டு வெளியேறுகிறோம்.ஆனாலும் நம் கடைசி நம்பிக்கையாக அதுவே எஞ்சுகிறது.


இந்திய மாநில தேர்தல்களின் வரலாறுகள் கூட அந்த நம்பிக்கையைத்தான்  உறுதி செய்கின்றன.1975 இல் அப்போதைய இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட அவசர காலத்தில் இருந்து கூட இந்திய ஜனநாயகம் மீண்டிருக்கிறது.

தமிழகத்திலும் கூட 356-ன்படி ஆட்சிகள் கலைக்கப்பட்டு ஜனநாயகம் மீட்கப்பட்டுள்ளது. அவை எல்லாம் தேர்தல் ஜனநாயகத்தின் சாட்சிகள்.

தேர்தல் ஜனநாயகத்தை முன்வைத்து கடந்த பத்தாண்டுகளில் இந்திய தேர்தல்களின் பின்னணியை சமூக ஆய்வு நோக்கில்  விரிவாகப் பேசுகிறது "இந்திய தேர்தல்களை வெல்வது எப்படி?'' நூல்.


இந்தியா முழுக்க பல தேர்தல் பிராச்சாரங்களுக்கு உதவிய தேர்தல் ஆலோசகர் சிவம் சங்கர் சிங் எழுதிய இந்த நூலை தமிழில் இ.பா.சிந்தன் மொழிப்பெயர்த்துள்ளார்.


அவர் இந்த நூலை எவ்வாறு எழுத தொடங்கினார் என்ற அத்தியாயமே இந்திய அரசியல். தேர்தல் சூழலுக்கு கட்டியம் கூறிவிடுகிறது. பா.ஜ.க தலைவர்கள் பலருடனும் இணைந்து  தேர்தல் ஆலோசகராக பணியாற்றிய அனுபவம், அந்த கட்சியின் வளர்ச்சியின் பின்ணணியை படிப் படியாக அலசி ஆராய செய்கிறது.

மோடி என்ற பிம்பம் எவ்வாறு குஜராத்தில் இருந்து பெரிதாக்கப்பட்டது என்பதற்கு விடை தருகிறார். பஞ்சாப்,மணிப்பூர்,திரிபுரா மாநிலங்களில் தேர்தல் அனுபவங்களிலிருந்து இந்தியா முழுக்க தேர்தல் நடைபெறும் ஒரு வடிவத்தை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

பிரச்சார யுக்திகள் தொழில் நுட்பத்தால் மாற்றமடைந்துள்ள நிலையை, அதன் பின்ணணிகளை அலசுகிறது.ஃபேக் செய்திகளை உருவாக்குதல், அதனை பரப்ப திட்டமிடுதல், அதில் கட்சித் தலைவர்களின் பாத்திரப் பங்களிப்பு ஆகியவற்றை விளக்குகிறது.


இந்திய சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற தேர்தல்களைப் பின்னோக்கி பார்க்க முடிகிறது.தேர்தல்,ஆட்சி அதிகாரத்தின் பின் இருக்கும் கார்ப்பரேட்களின் ஆதிக்கம் ,குறிப்பாக பிஜேபி அரசு எவ்வாறு சலுகை சார் முதலாளி அரசாக இருக்கிறது என்பதைத் தரவுகளோடு இந்நூல் முன்வைக்கிறது.


கட்சி அரசியல் தாண்டி தனி நபர்களாக மக்களுக்கு அரசியல் பணி செய்ய முன் வந்தவர்களின் முடிவை அரவிந்த் கெஜ்ரிவால், இரோம் சர்மிளா ஆகியோர் உள்ளிட்ட சிலரை முன்வைத்து பேசும் பக்கங்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பரிவோடு ஆய்வு செய்கின்றன.


இந்திய அரசியல் தேர்தலை மையமாக கொண்டே சுழல்வது.அதன் நிழல் உலகப் பின்னணியை முழுமுதலாக நாம் அறிந்து கொள்ள நூல் வழி செய்கிறது.


தனி நபரின் கடமை வாக்கு அளிப்பதோடு நிறைவுறுவதில்லை.தேசபக்தியின் உணர்ச்சியில் நம்மை கட்டிப்போட்டு வைத்துவிட்டு மேயும் கறுப்பு ஆடுகளை இது போன்ற வாசிப்புகள்தான் அடையாளம் காட்டுகின்றன. அவர்களின் திட்டங்களை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.

தேசபக்தி எல்லை மீறுகிறது

 


கபசுரக்குடிநீர் பாட்டிலில் கோமியத்தை நிரப்புகிறீர்கள்

மயானக் கரையில் அமர்ந்து பஜனை பாடுகிறீர்கள்

இறந்தவர்கள் எழுந்து ஒரு வரிக்கு தாளமிட்டு மீண்டும் கண்மூடிக்கொண்டதாக சிலாகிப்பு வேறு!


மரங்களில் மூக்குரசி ஆக்சிஜனைப் பெற முயற்சித்ததில்

ஏற்கனவே மாண்புமிகு  வைரஸ் குடித்ததுப் போக

மிச்ச சொட்டு ரத்தமும் போகிறது

"போனால் போகட்டும்

ரத்தம் மண்ணுக்கு உயிர் கொரோனாவுக்கு!"

என்று ஆவேசமடைகிறீர்கள்

அமைதி அமைதி

நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள்

ஆய்வகங்களில் கமகமக்கிறது சாணத்தின் வாசம்!


அதோ அங்கே

நாசா விஞ்ஞானிகள் 

தெறித்து ஓடுகிறார்கள்

விரட்டிப் பிடித்து பாரத் மாதாவை வாழ்த்தச் சொல்கிறீர்கள்

தேசபக்தியில் கோமாதாவுக்கே புல்லரிக்கிறது!


ஒரு புள்ளிவிவரம் 'மா' என்கிறது

மாட்டுச்சாணி சோப்புக்கும் கோமியச் சானிட்டைசருக்கும்

சந்தையில் தட்டுப்பாடு.

கெளபதியார் நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பு

கொரோனாவைத் தடுக்க வைக்கோல் மெத்தைகள்!


அதனாலென்ன

தேச பக்தர்களின் விரல்கள் வலுமிக்கவை

கூர் தீட்டினால் போதும்

ராகம் மாறாமல் சொறியத்தக்கவை!

Art : GraphicNerd

Friday, 14 May 2021

ஜி.நாகராஜன் : எழுத்தும் வாழ்வும்

சி.மோகன் எழுதிய "ஜி.நாகராஜன்:எழுத்தும் வாழ்வும்" நூல் கிண்டில் வாசிப்பில் கிடைக்கிறது.சிறந்த வாசிப்பனுபவத்தை தரும் நூல். 

ஜி.நாகராஜன் என்ற ஆளுமையை அவரது எழுத்து, வாழ்வின் ஊடாக சித்திரமாக முன் வைக்கிறது. ஒரு ஆவணத் திரைப்படத்துக்கான தொடக்கத்தோடு காட்சிகள் கண் முன் விரிந்து மெல்ல ஜி.என் என்னும் ஆளுமை விஸ்வரூபம் எடுத்து நிற்கச் செய்கிறது. அவருடைய தனிப்பட்ட வாழ்வில் ஒழுங்கு இல்லை என்று எல்லோரும் கவலையுறும்போது வாழ்வை நெருக்கமாகப் பார்த்து அதனை அனுபவித்து சென்றுள்ளார் ஜி.என்.இது ஒரு வகையில் பிறரால் இப்படியான சுதந்திரமான வாழ்வை வாழ முடியாத ஏக்கத்தையும் சேர்த்தே உணர்த்துகிறது. அவருடைய எழுத்தில் அவர் கடைப்பிடித்த சுருக்கத்தை தன் வாழ்க்கையாகவும் கொண்டு உள்ளார். 

ஜி.நாகராஜன் பற்றிய அறியப்படாத பக்கங்களை செய்தியாக இல்லாமல் கலை நயத்தோடு சி.மோகன் முன் வைத்துள்ளதுதான் பெருங்கலைஞனுக்கு செய்திருக்கும் மரியாதை. ஜி.நாகராஜனுடைய கட்டுரைத்தன எழுத்துக்களிலும் கூட புனைவில் இருக்கும் அதே தெளிவு. ஒரு படைப்புக்கும் அதன் படைப்பாளிக்கும் இடையேயான உறவு எப்படியானதாக இருக்க வேண்டும் என்பதை தர்மு சிவராமின் 'சதுரச் சிறகு' என்ற சிறுகதைக்கான விமர்சனத்தில் ஜி.என் வெளிப்படுத்தியிருக்கிறார். ஞானரதம் அக்டோபர் இதழில் வெளியான அக்கதைக்கு ஜி.என். எழுதிய விமர்சனம் ஞானரதம் ஜனவரி 1974 இதழில் வெளியானது. 

 //ஆசிரியர் தான் படைத்த படைப்பைப் பிறர் பார்க்கவொண்ணாதவாறு அவரே அதை மறைத்துக்கொண்டு நிற்பது போன்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. படைப்பாளிக்குத் தன் படைப்பைத் தன்னிலின்றும் முற்றும் துண்டித்துத் தூர நிறுத்தும் தார்மீக தைரியம் வேண்டும். 'சதுரச் சிறகுக’ளின் ஆசிரியரோ, தானில்லாது தன் எழுத்து நிற்காது என்ற அவநம்பிக்கையில் தானே அதைச் சுற்றிச் சுற்றி வருகிறார். கதைக்கு ஆதாரமான ஆசிரியரின் அனுபவம், இன்னும் ஆசிரியரின் உள்மனதோடு கொண்டிருக்கும் தொப்புள் கொடி உறவை அறுத்து விடுதலை பெறவில்லை போல் தோன்றுகிறது.//

ஜி.என்.னை முதன்மை பாத்திரமாகக் கொண்டு தமிழின் ஆகச் சிறந்த ஆளுமைகள் கதைகள் எழுதி இருப்பதையும் அவற்றைப் பற்றிய பத்திகளையும் சி.மோகன் அற்புதமாக எழுதி உள்ளார்.

ஜி.என் கதைகளில் பொன்மொழிகள் இல்லை என்று புகார் செய்பவர்களுக்காக சில பொன்மொழிகளையும் எழுதி இருக்கிறார்.அதிலொன்றுதான் புகழ்பெற்ற"மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்" அதிகம் அறியப்படாத ஒன்று இது, "மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்று குறையும்."

எழுத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி உள்ள ஜி.என் புற்றக்குடிப் புலவர் என்ற பெயரில் மூன்று கவிதைகள் எழுதி உள்ளார்.அதிலொன்று, 
 
சுய விருந்து

அவன் அல்லற் படுகின்றான்; 
இரங்காதே. 
அவள் தொல்லைப் படுகின்றாள்; 
கசியாதே. 
அவர் இம்சைப் படுகின்றார்; 
உருகாதே. கசிதலும், உனக்கு நீ ஊட்டும் விருந்தே! 
ஆவன இருப்பின் ஆவன செய்; செய்வன இல்லையேல் செல்லுக மேல்!

விளிம்பு நிலை மக்களின் வாழ்வை சுடராகத் தன் எழுத்தில் வைத்து அது மேலும் காலத்தால் துலங்கி பிரகாசிப்பதை நூல் உறுதி செய்கிறது. ஜி.என் .னின் எழுத்து,கட்சி மற்றும் கல்விப்பணி, திருமண வாழ்க்கை,நண்பர்களுடனான நாட்கள் என்று அவரின் ஒட்டுமொத்த வாழ்வையும் பேசுகிறது, "ஜி.நாகராஜன்-எழுத்தும் வாழ்வும்".

கிண்டில் நூலுக்கான சுட்டி:

Saturday, 8 May 2021

அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள் - வாசுகி பாஸ்கர்



 

"அம்பேத்கரின்  அணுகுமுறையை ,சிந்திக்கும் முறைமையை நாம் வேறோருவரையும் விட அம்பேத்கரிடம் இருந்து கற்பதே சரியானது.அதற்கு இத்தொகுப்பு உதவும்" என்று நூலின் தொகுப்பாசிரியர் வாசுகி பாஸ்கர் கூறுவது நிதர்சனம்.

"அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்". இத்தொகுப்பு நீலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னுரை என்பது ஒரு நூலுக்குள் நாம் செல்வதற்கு முன் அந்த நூலை குறித்த ஒரு அறிமுகமாகவே பெரும்பாலும் அமையும். சில நூல்களின் முன்னுரைகள் மட்டுமே வாசிப்பில் கூடுதல் கவனத்தை கேட்கக் கூடிய வகையில் பொருட்படுத்தத்தக்கதாக இருக்கும்.

அம்பேத்கர் ,அவரின் நூல்களுக்கு எழுதி இருக்கும் முன்னுரைகள் நூலின் பொருண்மைக்கு வலுச் சேர்க்கின்றன.அம்பேத்கரை அதிகம் வாசிக்காதவருக்கும் கூட அவரைப் பற்றிய வரைகோட்டை தந்து விடுகின்றன.

புத்தம் ,இந்து மதம்,சூத்திரர்கள்,சாதியை அழித்தொழித்தல்,காந்தி என அம்பேத்கரோடு அடிக்கடி வரலாற்றில் சேர்த்தே உச்சரிக்கப்படும் வார்த்தைகளின் பின் இருக்கும் அம்பேத்கரின் நிலைப்பாட்டையும் தாண்டி பல்வேறு பொருண்மைகளைப் பேசும் இந்த எழுத்தின் மூலம் ஒரு வாசகன் அம்பேத்கரை கூடுதலாக நெருங்க இத்தொகுப்பு வாய்ப்பளிக்கிறது.

பல விவகாரங்களில் அம்பேத்கர் அவரின் கருத்தில் எவ்வளவு உறுதியாக இருந்து இருக்கிறார் என்பதை  உணர முடிகிறது.தலித்களுக்கான சுதந்திரத்தை அவர்கள்தான் போராடி பெற்று கொள்ள வேண்டும் .பிற அமைப்புகள் அதை முன்னெடுக்க முயலும்போது ஏற்படும் விடுதல்கள்,நிபந்தனைகளோடு அது நிறைவை அடையாத சூழலுக்கு எவ்வாறு தள்ளப்படுகிறது என்பதை அவருடைய அனுபவங்களின் மூலம் தெளிவுறுத்துகிறார்.
ஆனாலும் கூட அவர் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம்  தலித் மக்களுக்கான விடுதலையை பெறும் முயற்சியை முன்நகர்த்துகிறார்.

அம்பேத்கர் இந்த முன்னுரைகள், நூல்களின் மூலம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்.அதில் இன்றும் ஒரு சாதி இந்துவால் பதில் அளிக்க முடியாத கேள்விகள் பல உள்ளன.
"தீண்டப்படாதோர் கிராமத்துக்கு வெளியே ஏன் வசிக்கின்றனர்?மாட்டிறைச்சி தின்பது ஏன் தீண்டாமைக்கு இட்டுச் செல்கிறது?இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உட்கொண்டதில்லையா?பிராமணல்லாதவர்கள் மாட்டிறைச்சி தின்பதை ஏன் கைவிட்டார்கள்?பிராமணர்களை சைவ உணவு உண்பவர்களாக ஆக்கியது எது?" எனக் கேள்விகள் நமக்குள்ளும் நீளுகின்றன.

மேலும் வாசிப்பின் போது சமகால அரசியலைச் பொருத்தி பார்ப்பது எனக்கு இயல்பான ஒன்று.அம்பேத்கரின் பல்வேறு கூற்றுகள் எதிர்காலத்தை அவர் தெளிவாக அனுமானித்துள்ளதாக உணரும் நான் கீழ்காணும் அவரின் கூற்றையும் அவ்வாறே கொள்கிறேன்.
"என்றேனும் ஒரு நாள் முஸ்லீம்கள் வகுப்பு நோக்கங்களுக்காகவும் இந்துக்கள் பொருளாதார நோக்கங்களுக்காகவும் மத்திய அரசாங்கத்தை ஒழித்துக் கட்டுவதற்கு கைகோர்ப்பது சாத்தியமே" என்கிறார்.இந்த பத்தியை இன்றைய சூழலுக்கு தனியாக நாம் விளக்க வேண்டியதில்லை.
மத்தியில் அதிகாரத்தைக் குவிக்கும் போக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே இருக்கிறது.இன்றைய பா.ஜ.க அரசு அதில் இன்னும் மோசமாகவே நடந்து வருகிறது."ஒன்றிய ஆட்சி வேண்டும்" என்று தென்னிந்தியாவில் தமிழ்நாடும் கேரளமும் உரக்கக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.
மத மாயைகளைத் தாண்டி பொருளாதார சுரண்டலை மக்கள் உணர்ந்து கொள்ளத் தொடங்கி விட்டனர்.இந்துக்கள் என்ற பெயரில் இவற்றையெல்லாம் மறைத்து விட  எண்ணும் முயற்சிகள் கண்டிப்பாக எடுபடாத காலம் நெருங்கி வருகிறது.
இந்துக்கள் பொருளாதார சுரண்டலுக்கு எதிராகவும் இஸ்லாமிய சமூகம் வகுப்புவாத பெயரில் நிகழ்த்தப்படும் அநியாயங்களுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுவர் என்று நான் இக்கூற்றை சமகாலத்தின் தேவையாகப் பொருத்தி பார்க்கிறேன்.

இதுபோன்று மத்திய அரசால் மாநில பொருளாதாரம் சுரண்டப்படுதல்,பாகிஸ்தான் பிரிவினை,ரூபாய் பிரச்சனை எனப் பொதுச் சமூகத்தில் பரந்துப்பட்டு பேசப்படாத அவரின் ஆய்வு நோக்கிலான எழுத்தின் ஆளுமையையும் இத் தொகுப்பு சேர்த்தே அறிமுகம் செய்கிறது.

இவ்வாசிப்பு அம்பேத்கரின் சிந்தனையை மேலும் தேடி வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தை அறிவு தளத்தில் நிகழ்த்துகிறது.

மிகுந்த கவனத்தோடும் பொறுப்புணர்வோடும் கட்டுரைகளைத் தொகுத்துள்ள வாசுகி பாஸ்கரின் பணி, காலத்தின் கடமை.

Wednesday, 2 December 2020

இரவின் பாடல் ததும்பும் காமத்தின் ஒளி

(ரொட்டிகளை விளைவிப்பவன் நூலை முன்வைத்து ந.பெரியசாமி எழுதிய விமர்சனம் 2020 செப்டம்பர் நிலவெளி இதழில் வெளியானது) 

லோலாக்கு அணிந்த காதுகள் அரிதாகின. நினைவில் அரிதானவைகள் தோன்ற அது நிரம்பிக் கிடந்த நாட்களில் பயணிக்கத் துவங்கிடுகிறோம். எதுவும் நிலைத்திருப்பதில்லை. நிலைத்திருக்க விடுவதுமில்லை. பயன்படுத்துபவர்கள் நாமாக இருந்தபோதும். நம் விருப்பங்களை பொருட்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன்களே. அதிகாரத்திலிருக்கும் அவன்களால் ஏற்படும் இழப்பு நட்சத்திரங்களின் எண்ணிக்கையாகிறது. காதோரம் லோலாக்கு கத சொல்லுதடி எனும் பாடல் வரிகள் லோலாக்குகளை ரசித்திருந்த நாட்களை மீட்டெடுப்பதுபோல் நம் இழந்த வாழ்வை மீட்டெடுக்கின்றன ஸ்டாலின் சரவணனின் ரொட்டிகளை விளைவிப்பவன் கவிதை தொகுப்பு. 

காற்று திறக்காத வரை 
தனக்குப் பின்னால்தான் 
பெருங்கடல் 
மறைந்து கொண்டிருப்பதாக 
எண்ணியிருக்கும் 
சிறு சன்னல். 
தொகுப்பின் துவக்கத்தில் இருக்கும் இக்கவிதையில் உள்ள சிறு சன்னலை நான் கண்களாக கொள்கிறேன். கண்களை மூடிக்கொள்ள எதுவும் சாத்தியமே. இச்சாத்தியத்தை நிகழ்வில் பொருத்துதல் எல்லோருக்கும் வாய்த்திடாது. பெரும்பாலானவர்களுக்கு ஆசைஇ கனவு என்ற நிலையிலேயே பதங்கமாகிவிடும். ஆனால் அதிகாரத்தில் இருப்பவனுக்கு சாத்தியமே. அவர்களின் கனவு ஆசை அனைத்தையும் சாத்தியமாகிக் கொண்டிருப்பதற்கு நாமே சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 'செம்புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி' கவிதையில் எளியோனின் ஆசையும்இ அதிகாரத்தின் ஆசையும் என்னவாக செயல்படுகிறது என்பதன் காட்சியாக்கம் நிதர்சனம். வாழ்வின் ஈரம் காய்ந்த பெண்ணொருத்தியின் அழுகுரலில் நம்மையும்இ பொக்லைன் முகம் தவலும் அமைதியில் அதிகாரத்தையும் கண்டுகொள்ள முடியும். 'கண்ணாடிப் போத்தலில் தெறித்த மூடியென வாழ்வு' கவிதையில் எளியோன் மதுவில் கிடப்பதுஇ அதிகாரம் தனி வார்டு அமைத்து அவனது உடமைகளை பறிப்பதுஇ 'காரம் நிமித்த இரவுகள்' கவிதையில் அல்சர் நோயாளிகளை உருவாக்கும் அதிகாரம் அவனையே பகடியாக்கி பார்த்து ரசிப்பதும் நல்ல வெளிப்பாடு. 

'ஞாயிறு போற்றுதும்' கவிதையில் எலும்புத் துண்டிற்காக எச்சிலொழுக காத்திருக்கும் வறிய நாக்குடையோருக்கும், கொழுத்த வயிருடையோருக்குமான அரசியல், 'ஒரு மரியாதை நிமித்தச் சந்திப்பு' கவிதையில் கர்த்தரையும் அய்யனாரையும் சந்திக்கச் செய்து கேட்டும் தட்டியும் நின்றுகொன்டிருக்கும் காலம் இதுவல்ல. உடைப்பை ஏற்படுத்தவேண்டிய காலம் இதுவென நினைவூட்டுகிறார் ஸ்டாலின். 

'குருதி வழியும் சக்கரப் பற்கள் ' கவிதை நாவலுக்கானது. தஞ்சை போன்று நிலமும் விவசாயமும் நிறைந்த பகுதிகளில் முதன்முதலாக ட்ராக்டரை பார்த்தபோது மக்களிடையே உண்டான அச்சம் எத்தகையானதென்பதை நம்மால் அறிய முடியும். மனித சக்தியை நம்பிக் கிடந்த முதலாளிகளுக்கு இயந்திரம் செல்லப்பிள்ளைகளானது. அறிவியல் எளியோனை பசித்த வயிறோடு அலையச் செய்தது. அதன் வியப்பை கண்டு வியந்தவன் வாயில் மண்ணை தள்ளி மகிழ்தது. நிலம் கடந்து இப்போ கம்பெனிகளில் அதன் அமித்ஷாதனத்தை தினம் எதிர்கொண்டு வாழ்கிறோம். நீண்டகால அனுபவத்தின் அறிவு செல்லாத பணமாகியது. புறக்கணிப்பின் வலிநீக்கியாக கலை இருப்பதால் பித்தாகவேண்டியோரின் எண்ணிக்கையை மட்டுப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் இக்கவிதையை வெகு நேரத்தியோடு காட்சிபடுத்தியுள்ளார். நிலத்திற்கு ஒவ்வாத ஒன்று வருவதை ஏற்க மறுக்கும் அந்நிலம்வாழ் உயிரிகளின் நிலையை காட்சிபடுத்தி, பின் மக்களின் வியப்பை காட்டி, இயந்திரத்தின் பசியைக் காட்டிஇ முத்தமிடும் முதலாளியின் வக்கிரத்தை சொல்லி, 

திருகாணிகள் தொலையாத வண்ணம்
பாதுகாப்பதைத் தவிர
ஏதும் வழியற்றவன்
நெஞ்சிலறைந்து அழுகையில்
சுடச்சுட விழும் ஒரு துளி
நூற்றாண்டு மூத்த கிழவனது. எனும் கவிதையின் முடிப்பிலிருக்கும் துளி இன்றளவும் சொட்டிக்கொண்டே இருக்கும் மூதாதைகளின் கரிப்பை நம் உடலும் உணர செய்திடுகிறார். இக்கவிதையின் நீட்சியாக 'ரொட்டிகளை விளைவிப்பவன் ' கவிதையை வைத்திருப்பது முந்தைய கவிதையின் வாசிப்பு மனநிலையை அப்படியே வைத்திருக்கச் செய்திடுகிறது. முதலாளிகள் வித்தை அறிந்தவர்கள் எவனிடம் எப்படி வேலையை கரக்க முடியும் எனும் அரிச்சுவடி அவர்களின் கவசகுண்டலம். விவசாய வேலையின் அனுபவத்தை பரோட்டா மாஸ்டராக மாற்ற செய்திருக்கும் லாவகம் அபாரமாக வெளிப்பட்டிருக்கிறது. பாலையாக்கப்பட்ட நிலத்திலிருக்கும் தலைவிக்கு அவன் வெற்றி நீர்வார்க்கும் செய்தியாக இருப்பது காலத்தின் அவலம். வெடித்துக் கிடக்கும் நிலத்தின் கதறல் நம்மின் கதறலாகவும் மாற்றம்கொள்ளச் செய்திடுகிறது கவிதை. நிலத்தினுள் மண்புழுவாக வாழ்பவனால்தான் இக்கவிதை சாத்தியம். ஸ்டாலின் மண்புழுவாக வாழ்ந்திருக்கிறார். 

சாத்தியப்படும் சூழலில் எல்லாத் தொடர்ந்து உலகமயமாக்கலினால் உண்டாகும் துயர்களை பாடிய பாணன் யவனிகாவிற்கு இக்கவிதைகளை சமர்ப்பித்திருப்பதில் ஸ்டாலினின் நுட்பத்தை உணரமுடிகிறது. துயரமும் வலியும் அடர்ந்து கிடக்கும் இப்பகுதியில் 

அவளைப் படுக்கையில் தள்ளுகையில்
காதில் விழும் குக்கர் சப்தம்
கலவிக்கான சங்கீதம். 

எனும் வரிகளில் ஸ்டாலின் மீட்பராகிடுகிறார். 

பெரிதினும் பெரிது கேள் நாம் உழன்று சிக்கிக்கொள்ளாமல், சிறிதினும் சிறிதாக ஆசைகொள்ள இடர் அகற்றி மகிழ்வை கண்டடைந்திடலாம். குளமாகி குளத்தின் படியாகி நனைய முடியாத வாழ்வை விட தினம் நனையும் சிட்டுக்குருவியாதல் அழகென காட்டும் இக்கவிதை வசீகரம் மிக்கதாக உள்ளது. 

குளக்கரையின் 
மேலிருந்து கீழிறங்கும் 
மூன்றாவது படிக்கட்டு 
நனைவதற்கு 
 நெடுங்காலம் ஆகிவிடுகிறது 
சிட்டுக் குருவியோ 
படிகளில் தாவித் தாவி 
தினம் நனைகிறது. 

கொடியது வாழ்வின் இழப்பை அறிந்துகொள்ளும் தருணம். ஸ்டாலின் சரவணன் நிறைய்ய வலிகளை நினைவு படுத்தியபடியே இருக்கிறார். மணலுக்கு மாற்றாக வந்திருக்கும் எம் சேண்ட்டை கைகளில் அள்ளிப் பார்க்க மலையின் கணத்தை உணருபவர்களால் இயல்பாக நகர்ந்திட முடியாதோ அவ்வாறாகத்தான் ' முன்பு மலையென்றிருந்தது' கவிதையை கடப்பதும். 

என்றைக்கும் எங்களோடு வாழ்ந்துகொண்டிருப்பவன் வே.பாபு. அவனுக்காக எழுதப்பட்ட அஞ்சலி கவிதை மீண்டும் அவனுடனான நாட்களைத் தத்தது. அக்கவிதையில் வீழ்ந்த நீர்துளிகள் அவன் உருவைக்காட்டி மறைந்தன.
 தேவாலய மெழுகுவர்தியினின்று
 கைக்கொண்ட சிறு வெளிச்சத்தோடும்
 ஓடுகிறான் கவிஞன்.
 எனும் வரிகளில் பாபுவை கட்டிவைத்துள்ளார் ஸ்டாலின். இக்கவிதை இருக்கும் இப்பகுதி யூமா வாசுகிக்கானதாக இருப்பது அத்தனை பொருத்தப்பாடு. எப்பொழுது அவருடன் உரையாடினாலும் மூவருக்குமான தனித்த நாட்களை நினைவூட்டியபடியே இருப்பார்.

 சமூகத்தின் பொதுபுத்தியில் இருக்கும் ஒழுங்கை ஆகச் சிறந்ததென முடிவுசெய்து அதில் ஒரு மில்லிமீட்டர் மீறலை செய்திட்டாலும் மிகுந்த பயமுறுத்தலைச் சொல்லி பத்திரமா இரு, பத்திரமா இருவென கண்டிப்புகளோடு குழந்தைகளை குழந்தமை இல்லாது, தனித்துவங்களைக் கண்டடைந்து கொண்டாடத் தவறிட்ட தறுதலைச் சமூகத்தின் அவலத்தை காட்சிபடுத்துகிறது இக்கவிதை.

தாய்த் தவளை
 குட்டிகளுக்குச் சொல்லியது
  குதிக்கையில் கவனமாய் இருங்கள்
 அதோ!
 வானத்தில் தலையிடிபட்டு
 மாண்டுபோன
 மூத்தக் குடியின் கல்லறை'

 இக்கவிதையின் நீட்சியாக இப்படியாக வளர்க்கப்படும் குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்தபின் அதிகார வர்க்கத்தின் எதிர்பார்ப்புகளை நிவர்த்திக்கும் வகையில் எப்படியான அடிமை வாழ்வை வாழ்கிறார்கள்இ வாழ்வார்கள் என்பதை காட்டுவதாக உள்ளது ' மிச்சசொச்ச வாழ்வின் சாம்பல்' கவிதை. காமம் மனவெளிப்பாடு. நினைவுகளின் தன்மைக்கேற்ப அதன் பிறப்பு இருக்கும். அவரவரின் வாழ்வியல் சூழலே இதற்கு ஆதாரம். அவ்வப்போது உண்டாகும் காமத்தின் புள்ளிகள் ததும்பும் கோலமாக பிரவகிக்கும் தருணம் மகத்தானது. இரவின் இக்கோலம் நமக்கானது. நம்மை கொண்டாட்டத்தில் வைத்திருப்பது. இது எல்லா இரவுகளுக்குமானதும் அல்ல. வகைமைகள் நிறைந்த காமத்தை இரவின் பாடலாக்கும் ஸ்டாலின் முதன்மையாக நிதானத்தில் இயங்கும் காமத்தைக் காட்டிஇ காய்ந்த சருகில் விழும் நெருப்பான காமத்தை பற்றவைத்து கூந்தலில் சொட்டும் வெள்ளத்தின் மீந்த துளிகளில் நமை சிலிர்க்கச்செய்து நமக்கான காமத்தை நினைவூட்டி வனப்பறவைகளாக நமை உருமாற்றம் கொள்ளச் செய்கிறார். இரவின் பாடல் ஒளி ததும்பும் ஆறு.

 சொற்கள் மகோன்னதமானவை. எதையும் சாத்தியமாக்கும். ஒரு கவிதைக்குள் இருக்கும் சொற்கள் நமை படுத்தும் பாடு அறிந்து அனுபவிப்பவர்கள்தானே. இயங்கியபடியே இருக்கும் காலத்தை கொண்டு எல்லா காலங்களிலும் போய்வரச் செய்யும் மாயங்களைச் செய்யக்கூடியது. 'அதனாலென்ன...' கவிதையில் அப்படியானதொரு மாயத்தை உணரலாம். நம்மை குழந்தையாக்குதல்இ நாமே குழந்தையாதல், குழந்தைமைக்கும் நமக்குமான ஊடாடலென பல தளங்களில் கவிதை நமை பயணிக்கச் செய்திடுகிறது. இக்கவிதையின் தொடர்ச்சியாக 'காலக் கம்பியிலாடும் சிறுபாதங்கள்' கவிதையைக் காணலாம். இக்கவிதை வெகு நேர்த்தியாக பின்னப்பட்டு நல்ல குறும்படம் ஒன்றை கண்ட மனநிலையைத் தருகிறது.

 அவளின் ஞானப்பல் தொட்டுத்
 திரும்பும் ஒவ்வொரு முறையிலும்
 தொலைந்து மீளுமவன்
 குழந்தையின் கையில்
 பனைவெல்லமாய் ஆகிறான்
 எனும் 'மெய்முழுக்கு' கவிதையில் வரும் வரிகள் நமை பனைவெல்லமாய் மாற்றுகின்றன. குழந்தைகள் வித்தைக்காரர்கள். அவர்கள் நாம் அவர்களை வளர்ப்பதாக நம்பி கெட்டித்துக்கிடக்கின்றோம். உண்மையில் அவர்கள்தான் நம்மை வளர்த்தெடுக்கிறார்கள். நம் மனத்தடைகளை விலக்கி குழந்தையாக தெரிந்துகொண்டால் போதும் வாழ்வில் பெரும் பொக்கிசங்களை கண்டடையலாம். யூமாவாசுகி போன்றோர் குழந்தையாக தெரிந்திருப்பதால்தான் அவர்களால் தொடர்ந்து சிறார் இலக்கியங்களை படைத்துக்கொண்டிருக்க முடிகிறது. ஸ்டாலினின் இக்கவிதை வாசிப்பவர்களை சில கணமாவது குழந்தையாக்கும்.

 மோசமான விபத்திலிருந்து மீண்டவனை சாவை பார்த்து வந்தவன்இ சாவை வென்று வந்தவன் என்றெல்லாம் சொல்வதுண்டு. மரணபயம் என்பதையே எதிர்கொள்ள தயங்கும் நமக்கு மரணம் குறித்த புரிதல்கள் வெவ்வேறானவை. புறத்தால் ஏற்படும் பாதிப்புகள் சரிசெய்துகொள்ளக் கூடியவை. அகத்தில் உண்டாகிட்ட பயம்தான் நம்மை ஆளத்தொடங்க எல்லாவற்றிலுமிருந்து விலகத் தொடங்கிடுகிறோம். 'விளரிப் பண்' கவிதையில் மரணத்திடம் மண்டியிட்டு கைவிரித்து ஒப்பளிக்க சொல்கிறார். எதுவொன்றிலும் நாம் நமை ஒப்பளிக்க அது குறித்த புரிதலை அடைய முடியும். இப்படியான மனப்போக்கு கைவரப்பெற்றவர்களால் வலியை நேசிக்க முடியும். வலியால் காதலை உணர்ந்து எத்தகைய வலியையும் தாங்க முடியும். சிறு முத்தம் வலியிலிருந்து விடுதலை அடையச் செய்யும் என்கிறார் ' சீழ் மணக்கும் காதலொன்று' கவிதையில்.

 ஆதார் எண்ணுக்கு தோட்டாக்களை ஊட்டுதல், குத்துக்காலிட்டு அமரும் மனப்போக்கு, சமூக விரோதமாக்கப்பட்ட உணவு பழக்கமென அதிகாரத்தின் கீழ்மையை எள்ளலோடு வெளிப்படுத்தல்இ அடிக்கடி திறந்து காட்டப்படும் உடல் சீக்கிரம் அலுப்பை ஏற்படுத்துமெனும் வாழ்தலின் மீதுள்ள நேசிப்புகள், கரிப்பு சுவையேறிய முலைகளோடு இருப்பவளுடனான அகத்தினைப் பாடல்கள் என தொகுப்பிலிருக்கும் சிறு குறிப்பு வரைதல் கவிதைகள் மூன்றும் முத்துக்கள்.

 புறத்தின் வலி, அகத்தின் அமைதி நிலை, அறியச்செய்யும் குழந்தமை, காதலின் உன்னதம், காமத்தின் மகோன்னதம், கீழ்மைமிகு அதிகாரத்தின் குரூரம்இ எளியோரின் மனப்போக்கு என பெரும் பயணிப்பை நமக்கானதாகவும் மாற்றியுள்ளார். கவிதைகளில் உரைநடை தன்மை மிகுந்து வாசிப்பில் சலிப்பை உருவாக்க இருக்கும் கணத்தில் கவித்துவமான சொற்கள் நமை நிமிர்வு கொள்ளச் செய்திடுகின்றன. தெளிந்த நீரோடையில் பளிங்காக மிளிர்ந்திடுகிறார் ஸ்டாலின் சரவணன்.

தேசத்தின் சிரிப்பு

Tuesday, 1 December 2020

"தமிழர் வாழ்வியலில் கலை" பற்றிய உரை

மும்பை இலக்கியக் கூடம் நடத்திய மெய்நிகர் நிகழ்வில் "தமிழர் வாழ்வியலில் கலை" என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை