Sunday, 29 May 2022

அன்றாடத்தின் அச்சாணியில் சுழலும் கதைகள்

 

நமது வாழ்வின் சாட்சியாகுபவை கதைகள். வாழ்வின் வேர்களில் இருந்து உருவப்படும் கதைகள், பசுமை மாறாமல் காலத்தால் நிலைக்கின்றன. செந்தில் ஜெகன்நாதன் தனது வாழ்வின் காலக்கடிகாரத்தில் பயணித்துத் தான் வளர்ந்த நிலத்தின் கதைகளை எழுதுவதில் அனுபவம் மிக்கவராக இருக்கிறார்.  அவரது நிலத்தைக் கதைகளில் ஆழமாக, உணர்வுமிக்கதாகப் பதிவு செய்து அவற்றைக் காலத்தில் நிலைக்கச் செய்துவிட எத்தனிக்கிறார். 

நிறைவான கதைகள் மிகுந்த தொகுப்பாக இவரின் "மழைக்கண்" இருக்கிறது. சொல்லல் முறை மற்றும் பொருண்மையைப் பொறுத்த அளவில் ஓரிரு கதைகள் மிகச் சாதாரணமானவையாகவே இருக்கின்றன, ஆனால் அவை மோசமானவையாக இல்லை என்பது ஆறுதல்.

மழைக்கண், பெருநல் உளனொருத்தி, நித்தியமானவன், காகளம் போன்ற கதைகள் செந்தில் ஜெகந்நாதனின் சிறுகதை வளத்திற்கான சான்று.

நூலின் அட்டைப்படம் பசுமையான பின்னணியில் ஒரு தாய் தன் பிள்ளைகளுடன் அமர்ந்து இருப்பதாக உள்ளது. கார்த்திகேயன் பங்காருவின் இந்தப் புகைப்படம்தான் இத்தொகுப்பின் உள்ளடக்கத்திற்கான பிரதிபலிப்பு. வேளாண் சமூகத்தில் இருந்து கதை எழுத வரும் ஒருவர் தன்னுடைய கதைகளில் நிலத்தின் புழுதியைக் கிளப்பாமல் எழுத முடியாது. பெரும்பாலான கதைகள் வேளாண் முறைகளில் இருந்து வரும் வாக்கியங்களைப் படிமமாகக் கொண்டுள்ளன.

உணர்வு என்பது கதையின் அடிநாதம். செந்தில் ஜெகன்நாதன் உணர்வின் அடியாழத்திற்குச் சென்று தொட்டுத் திரும்புகிறார். அதனால் அவரது கதைகளில் இருந்து வெக்கையும் குளிர்மையும் தீவிரத்தன்மை மாறாமல் வாசகர்களுக்கு உணர்வாகக் கடத்தப்படுகின்றன.

சினிமாவில் உதவி இயக்குநராகப் பணிபுரிபவர் என்பதால், காட்சிகளை விவரணைகளின் வழி கண்முன் கொண்டு வந்து நிறுத்த முடிகிறது. "வந்த கான்ஸ்டபிள் உடையணிந்த ஒருவரிடம் துணை நடிகை ஒருவர் ஏதோ சங்கேத பாஷையில் சைகை காட்ட, அவர் சட்டென்று திரும்பித் தனது பேண்ட் ஜிப்பை சரி செய்தார்" என்று சினிமா சூட்டிங் களத்தைப் பின்னணியாகக் கொண்ட நித்தியமானவன் கதையில் ஒரு பத்தி வரும். 



சினிமா எனும் களத்தின் அறியப்படாத பக்கங்களை வாசகன் அறிந்துகொள்ள தனது களமான சினிமா அனுபவங்களை செந்தில் ஜெகன்நாதன் பயன்படுத்திக்கொள்கிறார். சினிமாவில் வாய்ப்பு என்பது வரத்திற்கு நிகரானது. வரம் என்றாலும்கூட அதுவும் சரியான நேரத்தில், சரியானவர்களுக்கு சென்று சேர்வதும் இல்லை. அக்கதையில் அவரே கூறியதுபோல, "போலீஸாக நடிக்கவேண்டியவன் பிணமாக, பிணமாக நடிக்க வேண்டியவன் போலீஸாகவும் இங்கே நடிக்க வைக்கப்படுகிறார்கள்".

பிணமாக நடிப்பவன் எல்லாம் முடிந்த பிறகு கேமராவைப் பார்த்து மூன்று தடவை சிரிக்கவேண்டும். இது போன்ற துறைசார்ந்த பழக்கங்களைப் பிறருக்கு அறிமுகம் செய்வதற்கு செந்தில் தன்னுடைய கதைகளை ஊடகங்களாகப் பயன்படுத்திக்கொள்கிறார். ஆடிஷன் என்ற கதையும்கூட அவர் சார்ந்த சினிமா துறையைக் களமாகக் கொண்டே எழுதப்பட்டு உள்ளது.. ஆடிஷன் என்பதன் இறுதி முடிவுகள் யார் கையில் உள்ளன? அதில் ஒரு உதவி இயக்குநரின் பங்கு எதுவரை மட்டுமே இருக்கும்? இதுபோன்ற நுட்பமான இடங்களை வாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது.  

எவ்வம், நித்தியமானவன், நெருநல்உளனொருத்தி, காகளம் போன்ற தலைப்புகள் புதிதாகவும் புத்துணர்ச்சி மிக்கவையாகவும் இருக்கின்றன. "எவ்வம்" கதை, வறுமை, இயலாமை, கையறுநிலை போன்ற காரணங்களால் குழந்தைகள் மீது பெற்றோர்கள் ஏவும் வன்முறைகளைப் பேசுகிறது. குடும்பத்தில் குழந்தைகள் வெறும் பார்வையாளர்கள் அல்ல. அவர்களும் முக்கிய உறுப்பினர்களே. அவர்களை தத்தம் விருப்பதிற்கு ஏற்ப வளர்த்தெடுப்பது அடிப்படை அறங்களில் ஒன்று. அதனை முன்வைத்துச் செல்லும் கதையான எவ்வம், "உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல, அவர்கள் உங்களின் வழியாக வந்தவர்கள்" என்ற புகழ்பெற்ற கலீல் கிப்ரானின் வரிகளை எதிரொலிக்கிறது.

"முத்தத்துக்கு" கதையில் நெல்வாசம், மாம்பழவாசம் ஆகியவை கவனித்து எழுதப்பட்டு இருக்கும். ஆனாலும், இக்கதை வெறும் சம்பவங்களை வைத்தே முத்தத்துக்கு முன்னோட்டமாகப் பின்னப்பட்டுள்ளது.

ஒரு கதையின் தொடக்கம், சொல்லல் முறை, முடிவு இவற்றையெல்லாம் கச்சிதமாக வைத்துக்கொண்டு கதை எழுதும் சவாலில் செந்தில் ஜெகன்நாதன் இத்தொகுப்பில் வெற்றி பெறுகிறார். மொழி நடையில் வீண் அவசரம் காட்டப்படுவது இல்லை. நிதானமாக செல்லும் கதையில் தேவையான இடத்தில் வரும் சில வாசகங்கள் பதட்டத்தைத் தந்துவிடுகின்றன. காகளம், மழைக்கண், நெருநல் உளனொருத்தி கதைகள் வழியே தனக்கு அணுக்கமான நிலத்துக்குப் பயணிக்க வைக்கிறார். பிறந்து வளர்ந்த நிலம் என்பது அள்ள அள்ளக் குறையாத கதைகளை உடையது. ஆனால் அதன் மீச்சிறு நுணுக்கங்களையும் காலத்தில் தவறவிடாமல் பதிவு செய்திருப்பது சிறப்பு.

வெறும் கதைகளாக இவை அமையவில்லை. ஒரு கதையில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் வாசகனை குறைந்தபட்சம் தொந்தரவேனும் செய்யவேண்டும்.  அவ்வகைமையில் மழைக்கண் கதை பேசும் நுட்பங்கள் அருமையானவை. ஒரு குடும்பத்தின் பெண் நோய்மையுறும்போது அந்தக் குடும்பமே அவதியுறுகிறது. தலைமைத்துவமிக்க ஒரு ஆண் நோயுற்றால்கூட அவருக்கு ஒரு அறை, சில பாத்திரங்கள், தனிமை மட்டுமே போதுமாகிறது. இங்கு ஒரு பெண் நோயுற்றாலும் அவள் குடும்பத்தின் மைய அச்சாணியாக இருந்து கால்களை சுற்றிக்கொண்டிருக்கும் சமையல் கடமைகளை மூன்று வேளையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. அவளால் உணவு தயாரிக்கும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. இக்கதையின்மூலம் பேசப்படும் பாலின அரசியல் முக்கியமானது. வேளாண் தொழில், பலவிதமான கள ஆபத்துகளையும் உள்ளடக்கியது. ஒரு பூச்சிக்கடி, அதையொட்டிய நோய், மருத்துவமனைகள் என்று கதையின் நகர்வில் மருத்துவம் சார்ந்த அறிவியல் மற்றும் காரணகாரியப் பிழைகள் இல்லாமல் கொண்டு செல்கிறார் செந்தில் ஜெகன்நாதன். 

காகளம் கதையின் பின்னணியில் ஒரு இசைத்தட்டு சுழன்றுகொண்டே இருக்கிறது. முதலாளி-தொழிலாளி உறவின் பின் இருக்கும் உன்னதங்கள், இரண்டு கதாபாத்திரங்களையும் தகுதி மிக்கவையான மாற்றுகின்றன. பாத்திர வடிவமைப்பின் லயம் சீராக இருக்கிறது. செவ்வியல் எழுத்து எனும் களத்துக்கு இதுபோன்ற கதைகள் செந்தில் ஜெகந்நாதனை எளிதில் அழைத்துச் செல்கின்றன. மளிகைக்கடைத் தொழில், கடைச்சூழல், முதலாளி-தொழிலாளி உறவு, தொழில் துரோகம், சரிவு, இலாபம், அதனைத் தொடர்ந்து வரும் குற்ற உணர்ச்சி, குற்றவுணர்ச்சியை வெற்றியால் கடந்துபோதல் அல்லது இல்லாமல் செய்தல் என்று பல கோணங்களில் பேசப்படும் கதை இது. இந்தக் கதையின் பின்னணியில் இசைக்கப்படும் பாடல்கள், அவற்றின் தத்துவப்பின்னணியைக் கதாபாத்திரங்கள் வாழ்வோடு பொருத்திப் பார்க்கும் விதம் ஆகியவை அசரடிக்கும் எழுத்தால் வடிக்கப்பட்டு, வாசிப்பின் பரவசத்தை உறுதி செய்கின்றன.

செந்தில் ஜெகன்நாதன் தனது பெரும்பாலான கதைகளை அச்சாணியை சுழலவிட்டுத் தாய்நிலத்துக்கு நகர்த்தி சேர்த்து வைத்த உணர்வுக் கிளிஞ்சல்களைப் பொறுக்கி, மூடிவைத்த விதைகளைக் கிளர்த்தி எழுதவே விரும்புகிறார் போலும். அன்றாடங்களைப் பேசும் இவரது கதைகள், உறவுச்சிக்கலையோ உறவின் உன்னதத்தையோ பேசுகின்றன. "அன்பின் நிழல்" கதை அப்பா-மகன் உறவையும், மழைக்கண் கதை அம்மா-மகன் - அப்பா உறவையும் நெருநல் உளனொருத்தி கதை அண்ணன் - தங்கை உறவின் நீள அகலப் பரிமாணங்களையும் ஆய்வு செய்கிறது. உறவைப் போற்றுவதே இவரது கதைகளின் நிதர்சனம் என்றாலும்கூட, அதன் நிதர்சனமான நிணநீர் ஒழுகுதலையும் இவர் காட்டத் தவறுவதே இல்லை. அப்பா-மகன் உறவில் வரும் வெறுப்பு, பொருளற்றுப் போகும்போது பின்வாங்கத் தயங்காத உறவுகள் குறித்துத் தயக்கமின்றிப் பேசுவதே இத்தொகுப்பின் பலம்.

இன்னும் கூடுதலாக அசலான கதைகளை செந்தில் ஜெகன்நாதன் தருவார் என்பதற்கான நம்பிக்கையை இத்தொகுப்பு தருகிறது. தான் பணிபுரியும் களத்தை, அதன் பரிச்சயமில்லாத முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் கதைகளில் வெறும் சம்பவங்களே மேலோங்கி இருக்கின்றன. அதேநேரம் நிலத்தின்பாற்பட்டு கிளர்த்தெழுந்த கதைகளில் இவரது எழுத்தும் கதைசொல்லல் முறையும் உச்சத்தை எட்டிப் பிடிக்கின்றன. 

களம்-நிலம்-உணர்வு ஆகிய மூன்று புள்ளிகளில் இருந்து கிளைத்து எழும் இவரது கதைகள் வேரின் ஆழமும் பூவின் மலர்ச்சியும் கனியின் சுவையும் கொண்டவை. 


Sunday, 20 June 2021

துயர நடனம்



பசியில் வீறிட்டழுதல், பசியில் சிரித்தல், பசியில் புலம்புதல், பசியில் தலைதெறிக்க ஓடுதல் என்று பசியிலிருந்து கிளர்ந்தெழுந்த கவிதைகள் மன எழுச்சியின் உச்சத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள். பதினொரு பத்திகளாகப் பிரித்து எழுதப்பட்ட அறிமுகவுரையிலிருந்து தொடங்கும் துயரத்தின் நடனம் போகப்போக சுழன்றாடுகிறது. புகைத்தபடி அட்டைப்படத்தில் பறையின்மீது நின்றாடும் அந்த மனிதன் அனாமிகாவேதான்.

உலகில் எல்லாம் பசியிலிருந்தே தொடங்குகிறது. உடல் பசி, மனப்பசி என ஏதோ ஒரு பசியின்முன் மனிதன் மண்டியிட்டே ஆகவேண்டும். அதனிடம் நீங்கள் எந்த சமாதானத்தையும் தெரிவித்து தப்பிவிட முடியாது. அதற்கு நீங்கள் தீனியிடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கும் வழியற்றவன்தான் தற்கொலைக்கு முன்வருகிறான்.

துர்மரணங்களைத் தொடர்ந்து சந்திக்கும் ஒருவனின் மனநிலை சிதைவுக்குள்ளாவது நடைமுறை. சிசுவின் மரணத்திலிருந்து பழுத்து விழும் மனிதர்கள் வரை. அனாமிகாவின் கவிதைகளில் மரண ஊர்வலத்தின்போது வழியெங்கும் சிதறிக்கிடக்கும் பூக்களின் வாசம். அத்தோடு அனாமிகா நிறுத்துவது இல்லை. உங்களை அந்த நறுமணமிக்க உடலின் அருகிலும் அழைத்துச் செல்கிறார். அதன்மீது பூசப்பட்டிருக்கும் திரவியத்தை உங்கள் நாசிக்கும் படரச் செய்கிறார். தாங்க இயலாமல் மயங்கி விழும் உங்களின் முகத்தில் புகையை ஊதிவிட்டு சிரிக்கிறார்.வார்த்தைகளின் மூர்க்கத்தில் மனம் பிறழலாம்.

பிணவறையின் வாசலில் காத்துக் கிடக்கும் இக்கவிதைகள் வகை வகையான உடல்களை தரிசிக்கச் செய்கின்றன. கண்ணீர்க் கோடுகள் விழுந்து முகத்தில் பள்ளமே வரையப்பட்டுவிடலாம். எல்லாம் தாண்டி மரணத்தின்முன் ஆடும் கால்களின் உற்சாகத்தில் மரணத்தைப் பார்க்க வைத்துவிடுகின்றன .

மதத்தைக் கேள்வி கேட்பது, தேவாலயங்களுக்குள் உயிரற்ற உடலைச் சுமந்து மட்டுமே செல்வது என்று ஒரு கலகத்தை நிறுவனமயப் படுத்தப்பட்ட அமைப்புகளின் முன் நிகழ்த்துகிறார். தேவனின் ஆலயத்திற்குள் மண்டியிட்டுப் பிரார்த்திக்க மட்டுமே செல்லாமல் துயரத்தின் பொழுதுகளின்போது  சென்று உன் மகிமையின் லட்சணத்தைப் பாரென்று அவரை  தொந்தரவுக்குள்ளாக்குவதை கவிதையின் பொறுப்புகளுக்குள் கொண்டு வருகிறார்.

தன்னிலையில் இருந்து எழுதப்பட்டதோடு பொதுமைப்படுத்தப்பட்ட  கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. ஆனாலும் தன்னிலைக் கவிதைகள் ஏற்படுத்தும் தாக்கம் அளவில்லாதது. அதிர்வுகளைத் தொடர்ந்து தந்து அதை வாழ்வின் இயல்பாக ஏற்றுக்கொள்ளச் செய்துவிடுகிறார். மனநலம் பிறழ்வது, தற்கொலைக்கு முயல்வது, மரணத்தை வரவேற்கத் தயாராவது இதெல்லாம் இயல்பின் மீறல்கள் அல்ல. எல்லாருக்குள்ளும் இவை நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

இந்த உலகம் வரையறுக்கும் புனிதங்களை உடைத்து வாழ்வின் மறுபக்கத்தைக் காட்டும் இந்த அழுக்கான கவிதைகள்,உடல் என்பது மினுமினுக்கும் தோலைத் தாண்டிய ரத்தமும் எலும்புமான உண்மையென உணர்த்துகின்றன.

துயரநடனம், 
அனாமிகா
தமிழ்வெளி வெளியீடு.


Tuesday, 8 June 2021

இதுதான் வைரல்



பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள "இதுதான் வைரல்" நூலை வாசிப்பது, பெருந்தொற்றுக் காலத்தின் பெரும் தேவைகளில் ஒன்று. நூலாசிரியர் முனைவர் ஹேமபிரபா பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும்போது எனது கவிதைகளின் வழியாக அறிமுகமானவர். கலை, இலக்கியங்கள் மீதான உரையாடல் தளத்தை அறிவியல் கழகத்தில் நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கியவர். எனது ஆரஞ்சு மணக்கும் பசி தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளுக்கான விவாதக் களத்தை அறிவியல் கழகத்தில் உருவாக்கிய வகையில் நெருக்கமான நட்பு வட்டத்தில் வந்தவர். 

தமிழ் இந்துவில் தொடர்ந்து அவர் எழுதிவரும் சமீபத்திய கட்டுரைகள் மிகுந்த ஆர்வத்தை அறிவியல் துறையில் ஏற்படுத்தி வருகின்றன. இவரின் முதல் கட்டுரைத் தொகுப்பு "இதுதான் வைரல்".
 
ஹேமபிரபாவின் அறிவியல் கட்டுரைகளின் பலமாக இருப்பது, அவரின் எழுத்து வாசிப்பவர்களுக்கு அணுக்கமாக இருப்பதுதான். சிக்கலான் குறியீடுகள் நிறைந்த அறிவியல் கட்டுரைகளை எளிதாகத் தருவது மிகுந்த சவாலான ஒன்று. அதை சாத்தியப்படுத்தி இருக்கும் எழுத்தாளர்களின் வரிசையில் இணைகிறார். 

பெருந்தொற்று முதல் அலையில் இடைப்பட்ட காலத்தில் மூத்த வயது உறவினர் இறந்துபோனார். கோவிட்-19 தாக்குதலுக்கு ஆளாகி அதிலிருந்து குணமான பின்னரும் அதன் தாக்கத்திலிருந்து மீள இயலாமல் அவர் காலத்தில் மறைந்தார். அவரது நெருக்கமான உறவினரான, மென்பொறியாளராக இருக்கும் இளம்பெண் ஒருவர், அங்கு இருந்தவர்களிடம் உரத்த குரலில் சண்டையிட்டார். அவரை மருத்துவமனைக்கு சிகிச்சையின் பொருட்டு அழைத்து வந்தவர்களைக் குற்றம் சாட்டினார். கரோனா தாக்குதல் என்பது கட்டுக்கதை என்றெல்லாம் அவர் பேசிக்கொண்டே போனது அபத்தத்தின் உச்சம். அதே இளம்பெண் சமீபத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை வாட்ஸப் ஸ்டேட்டஸில் வைத்திருந்தார். "கரோனா என்பது நோயே அல்ல என்றால் எதற்குத் தடுப்பூசி? என்று நான் அவரிடம் கேட்டபோது இப்போதும் தனக்கு அந்தக் கருத்தில் மாற்றமில்லை என்றும், வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தலால் சாமி படத்திற்கு முன்பு சீட்டு எழுதிப்போட்டு தேர்வு செய்து தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். படிப்புக்கும் அறிவுக்கும் இருக்கும் பாரதூரமிகு சமூகத்தின் சாட்சியாக அந்த இளம்பெண் காட்சியளிக்கிறார். 

கருதுகோள்களின் மீது உள்ள சந்தேகங்களை சாதகமாக்கிக்கொண்டு பெருந்தொற்றுக் காலத்தில் பல்வேறு அவதூறுகளை சமூக ஊடகங்களில் பரப்பிவரும் நடமாடும் வெடிகுண்டுகளோடுதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இத்தகு சூழலில் வைரஸ் குறித்த புரிதல்களைப் பல்வேறு கோணங்களில் எடுத்துரைக்கிறார் ஹேமபிரபா. 

வைரஸை இனம் காணுவதில் இருந்து அதனை ஒட்டி உலகம் முழுக்க விரவிய வதந்திகள், தடுப்பு மருந்துகள், பரவும் முறைகள், வயதுவாரியாக நோய்த்தடுப்பு முறை செயல்படும் விதம், அவற்றை உருவாக்கும் முறைகள் எனப் பலவற்றையும் ஆராயும் கட்டுரைகள்.

அறிவியல் ஆராய்ச்சிப் பணியில் இருப்பவர் என்பதால் உலகம் முழுவதும் எழுதப்படும் கட்டுரைகளின் வாசிப்பறிவு பல்வேறு தரவுகளோடு அவரின் எழுத்தில் கூடுதல் தெளிவைத் தருகிறது. 

பெருந்தொற்றுக் காலத்தின் தொடக்கம் முதல் முதல் அலையின் முடிவுக்காலம் வரை படிப்படியாக அறிவியல் பார்வையோடு கட்டுரைகளாகப் பதிவு செய்துள்ளார். இதுபோன்ற இடர்மிகு காலகட்டங்களில் உலக சுகாதார நிறுவனம் கொள்ளவேண்டிய கவனத்தின் விடுபடல்களையும் சுட்டிக் காட்டுகிறார். உலகம் முழுவதும் வைரஸ் குறித்த ஆய்வு நிலவரங்களை எடுத்துக் கூறுகிறார். 

தமிழ் இலக்கியத்தின்மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தின் வெளிப்பாடு அறிவியல் கலைச் சொற்களைத் தமிழ்க் கட்டுரைகளில் பயன்படுத்த வைத்துள்ளது என்று எண்ணுகிறேன். மேலும் 

இதுபோன்ற பெருந்தொற்றுக் காலங்களை வரலாற்றில் அறிவியல் துணைகொண்டு கடந்து வந்ததைத் தன் கட்டுரைகளில் கூறி இருப்பது ஆறுதலைத் தருவதோடு பெருத்த நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. வாசிப்பவர்களுக்கு அறிவியல் மீது ஆழ்ந்த பிடிப்பை இவரது எழுத்து உருவாக்குகிறது. மக்களுக்கும் அறிவியலுக்கும் இருக்கும் பிணைப்பை மேலும் வலுவாக்கும் இவரது எழுத்து அறிவியல் மக்களுக்கே என்ற முழக்கத்துக்குத் துணை செய்யும் குரல்களில் ஒன்றாக அமைந்து, தன் முதல் தொகுப்பின் மூலமாக ஒரு இடத்தைக் கோருகிறது.

Tuesday, 1 June 2021

அந்திக்குப் பின்னும் நீளும் பாடவேளைகள்




சில நேரங்களில் கவிதைகளை கடைசி பக்கத்திலிருந்து வாசிப்பதுண்டு.அப்படிதான் கே.ஸ்டாலின் எழுதிய “அப்பாவின் நண்பர்” கவிதை நூலை வாசித்தேன்.

அந்த வரிசையில் மூன்றாவது கவிதையில் , தாமதமாய்ப் பள்ளிக்கு வரும் மாணவன் வகுப்பறைக்கு வெளியே தயங்கி நிற்பதைப் போல மழை விட்ட மரத்தின்  இலை நுனியில் நிற்கும் துளியை தரைப் பார்க்க வைத்து இருப்பார்.வாசிப்பு முடியும் வரை அந்த துளியை நான் அவ்வப்போது நிமிர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன்.

கவிதைகள் சொல்லப்படும் தொனி, ஒரே சீரான லயத்தில் சென்றுக் கொண்டு இருக்கிறது.வழிப்போக்கர்கள்,வீடற்றவர்கள்,சித்தாள்கள்,மதுக் கடையில் பணிபுரிபவர்கள் என பலரும் வந்து போகும் தொகுப்பில் பள்ளியிலிருந்து  சிறப்பு வகுப்பு  முடிந்தவுடன் தங்கைக்காக கால்சட்டையில்  முட்டையை பாதுகாத்துக்கொண்டு ஒடும் சிறுவன் மீதுதான் என் கவனம்.அவன் முட்டை கீழே விழுந்து விடாமல் வீடு சேர வேண்டும் என்றே மனம் பதைபதைக்கிறது.எளிய மனிதர்கள் மீது நம் கவனத்தை மேலும் குவிக்க்க் கோருகிறது இத்தொகுப்பு..குறிப்பாக சிறுவர் ,சிறுமியர்களின் வாழ்வியலில் நுழைந்து திரும்பச் செய்யும் இக்கவிதைகள் நம் பாதங்களில் புழுதி வாசத்தைக் கிளர்த்துகின்றன.

சிறு நகரையும் கிராமத்தையும் தன் கவிதை கோட்டுச் சித்திரங்களில் இணைக்க முயற்சிக்கிறார் கே.ஸ்டாலின்.

உறவுகளை நிலத்தோடு பொருத்திப் பார்க்கும் கவிதைகள் உறவுகளை நேர்த்தியாக காட்சிப்படுத்துகின்றன.

குழந்தைகளுக்கு நேரும் துயரங்களை காண்கையில் கவிதைகள் உணர்ச்சி மீறுகின்றன.கடவுளின் கண்களையும்,காதுகளையும் ஊனப்படுத்தும் வகையில்  வார்த்தைகளில் வலு சேர்க்கிறார்.


வாழ்க்கைக்குள் நீடித்து நிலைத்திருக்கும் மரணத்தை பேசும் கவிதைகள் வாசிப்பவனின் அகத்தை சலனமுறச் செய்கின்றன.வாழ்வின் இரு பக்கங்களிலும் மாறி மாறி செல்லும் பயணம் வாசிப்பாளனுக்கு தனி அனுபவத்தை தருகிறது.

இந்த அறமும் அன்பும் நீடிக்கும் கவிதைகளை தொடர்ந்து கே.ஸ்டாலின் தர வேண்டும். 

தொகுப்பை வாசித்து முடித்த பிறகும் நகரப் பேருந்தில் இருந்து மெல்லக் குனிந்து கைஅசைப்பவளின் பூரித்த முகம் இன்னும் நிழாலடுகிறது.

Monday, 31 May 2021

யா - ஒ



நமக்குள் பல கேள்விகள் இருக்கும்.காலம்காலமாக அதற்கான விடை தேடலைத்தான் வாழ்க்கை பயணம் என்று நம்பிக் கொண்டு இருக்கிறோம்.பல விடைகள் நமக்குள்ளே இருக்கும்.நாம் கண்டடைவதில்தான் சிக்கல்.தலையில் வைத்துக் கொண்டே சீப்பைத் தேடுவது போல் ஆகிவிடும்.சில நேரங்களில் எவ்வளவு தேடினாலும் கிடைக்காத ஆழத்தில் பதில்கள் ஒளிந்து கொள்ளும்.

இரண்டு பாத்திரங்களையும் நாமே வகிப்பதை விட நமக்கு வெளியே நிகழ்த்தி அதனைக் கவனிப்பது மட்டுமே நமது வேலையாக்குகிறார்கள் ஆசானும் சீடனும்.
யாவோவும் யாவாவும் உரையாடுகிறார்கள்.நாம்தான் பார்வையாளர்கள்.வாழ்க்கையெனும் நாடகத்தின் பல காட்சிகள் கண்முன் விரிகின்றன.யாவாவின் பல பந்துகளை வாழ்க்கைக்கு வெளியே விளாசிவிட்டு தனது அடுத்த பந்துக்காக காத்திருக்கிறார் யாவோ.
வாழ்வின் நுட்பமான இடங்களை தொடும் கேள்விகளும் பதில்களும் நம்மை  தெளியச் செய்கின்றன.

இளங்குடியை முடித்துவிட்டு பேசிக்கொண்டு இருக்கையில் யாவா, தேடல் குறித்து ஒரு கேள்வி கேட்க யாவோ சொல்வார் ,
//எளிமையானது யாவா எளிமையானது
தாகம் நீரைத் தேடும்
கிணறு தாகத்தைத் தேடும்//

அந்த கடைசி வரிதான் எத்தனை ஆழமானதாக இருக்கிறது!? தாகம் என்பதை மட்டும் அது குறிப்பதில்லை.அதில் எதையும் நாம் பொருத்திக் கொள்ளலாம்.

கால இட பேதங்களுக்குள் விழுந்து கிடக்கும் மனித வாழ்விற்கு ஒரு கை நீட்டுகிறார் யாவோ.
அது மீட்கலாம், மீண்டும் அதற்குள் தள்ளலாம்.
ஏனெனில் கொல்வதற்கு கொடுக்கப்பட்ட விஷம் ஒருவரைக் குணப்படுத்தி விடலாம்.குணப்படுத்தக் கொடுத்த மருந்து ஒருவரைக் கொல்லலாம்.இதையும் யாவோதான் சொல்கிறார்.

ஆழமாக சிந்திக்கையில் வார்த்தைகள் அசுர பலமடைகின்றன.
ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட்டுக்கு ஒரு பதமாக யாவோவின் ஒரு அறை இப்போது உங்கள் கன்னத்தில் விழட்டும்.
"நிசப்தம் என்பது சப்தத்தின் கள்ளக் குழந்தை"



இந்த வார்த்தைகளை நம்மிடம் சேர்த்த தோழர் சிவசங்கர் , அற்புதமான ஓவியங்களால் அதனை ஈடு செய்துள்ள தோழர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் இருவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

Monday, 17 May 2021

இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி

தேர்தல் ஜனநாயகம் என்றொரு வார்த்தையை நாம் அடிக்கடி உபயோகப் படுத்துகிறோம். உண்மையில் அது உயிர்ப்போடுதான் இருக்கிறதா?பணம்,மதம்,சாதி எல்லாம் சேர்ந்து தாக்குதல் நிகழ்த்திய பிறகும் தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் ரத்தம் வழிய எழுந்து நிற்கும் கதாநாயகன் போல எப்படி அது  பிழைத்துக்கொள்கிறது?

நம் ஒவ்வொருவர் கைகளில் இருக்கும் அந்த ஒரு வாக்குதான் உதவி செய்கிறது. உண்மையில் அது நிற்க உதவுகிறதா? இல்லை அது ஒரு பாவனையா? இறந்து போன சடலத்தை நாம் அலங்கரித்து வைத்துக் கொண்டு ஆறுதல் அடைந்துக் கொள்கிறோமா?


ஒவ்வொரு தேர்தலிலும் அதன் போக்குகளைப் பார்த்து நாம் விரக்தியடைகிறோம். வாக்கு அளிக்கும் இயந்திரம் நாம் அளித்த வாக்கை சரியாக பதிவு செய்துக் கொண்டதா என்று அதை திரும்பி பார்த்துக் கொண்டேதான் வாக்குசாவடியை விட்டு வெளியேறுகிறோம்.ஆனாலும் நம் கடைசி நம்பிக்கையாக அதுவே எஞ்சுகிறது.


இந்திய மாநில தேர்தல்களின் வரலாறுகள் கூட அந்த நம்பிக்கையைத்தான்  உறுதி செய்கின்றன.1975 இல் அப்போதைய இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட அவசர காலத்தில் இருந்து கூட இந்திய ஜனநாயகம் மீண்டிருக்கிறது.

தமிழகத்திலும் கூட 356-ன்படி ஆட்சிகள் கலைக்கப்பட்டு ஜனநாயகம் மீட்கப்பட்டுள்ளது. அவை எல்லாம் தேர்தல் ஜனநாயகத்தின் சாட்சிகள்.

தேர்தல் ஜனநாயகத்தை முன்வைத்து கடந்த பத்தாண்டுகளில் இந்திய தேர்தல்களின் பின்னணியை சமூக ஆய்வு நோக்கில்  விரிவாகப் பேசுகிறது "இந்திய தேர்தல்களை வெல்வது எப்படி?'' நூல்.


இந்தியா முழுக்க பல தேர்தல் பிராச்சாரங்களுக்கு உதவிய தேர்தல் ஆலோசகர் சிவம் சங்கர் சிங் எழுதிய இந்த நூலை தமிழில் இ.பா.சிந்தன் மொழிப்பெயர்த்துள்ளார்.


அவர் இந்த நூலை எவ்வாறு எழுத தொடங்கினார் என்ற அத்தியாயமே இந்திய அரசியல். தேர்தல் சூழலுக்கு கட்டியம் கூறிவிடுகிறது. பா.ஜ.க தலைவர்கள் பலருடனும் இணைந்து  தேர்தல் ஆலோசகராக பணியாற்றிய அனுபவம், அந்த கட்சியின் வளர்ச்சியின் பின்ணணியை படிப் படியாக அலசி ஆராய செய்கிறது.

மோடி என்ற பிம்பம் எவ்வாறு குஜராத்தில் இருந்து பெரிதாக்கப்பட்டது என்பதற்கு விடை தருகிறார். பஞ்சாப்,மணிப்பூர்,திரிபுரா மாநிலங்களில் தேர்தல் அனுபவங்களிலிருந்து இந்தியா முழுக்க தேர்தல் நடைபெறும் ஒரு வடிவத்தை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

பிரச்சார யுக்திகள் தொழில் நுட்பத்தால் மாற்றமடைந்துள்ள நிலையை, அதன் பின்ணணிகளை அலசுகிறது.ஃபேக் செய்திகளை உருவாக்குதல், அதனை பரப்ப திட்டமிடுதல், அதில் கட்சித் தலைவர்களின் பாத்திரப் பங்களிப்பு ஆகியவற்றை விளக்குகிறது.


இந்திய சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற தேர்தல்களைப் பின்னோக்கி பார்க்க முடிகிறது.தேர்தல்,ஆட்சி அதிகாரத்தின் பின் இருக்கும் கார்ப்பரேட்களின் ஆதிக்கம் ,குறிப்பாக பிஜேபி அரசு எவ்வாறு சலுகை சார் முதலாளி அரசாக இருக்கிறது என்பதைத் தரவுகளோடு இந்நூல் முன்வைக்கிறது.


கட்சி அரசியல் தாண்டி தனி நபர்களாக மக்களுக்கு அரசியல் பணி செய்ய முன் வந்தவர்களின் முடிவை அரவிந்த் கெஜ்ரிவால், இரோம் சர்மிளா ஆகியோர் உள்ளிட்ட சிலரை முன்வைத்து பேசும் பக்கங்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பரிவோடு ஆய்வு செய்கின்றன.


இந்திய அரசியல் தேர்தலை மையமாக கொண்டே சுழல்வது.அதன் நிழல் உலகப் பின்னணியை முழுமுதலாக நாம் அறிந்து கொள்ள நூல் வழி செய்கிறது.


தனி நபரின் கடமை வாக்கு அளிப்பதோடு நிறைவுறுவதில்லை.தேசபக்தியின் உணர்ச்சியில் நம்மை கட்டிப்போட்டு வைத்துவிட்டு மேயும் கறுப்பு ஆடுகளை இது போன்ற வாசிப்புகள்தான் அடையாளம் காட்டுகின்றன. அவர்களின் திட்டங்களை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.

தேசபக்தி எல்லை மீறுகிறது

 


கபசுரக்குடிநீர் பாட்டிலில் கோமியத்தை நிரப்புகிறீர்கள்

மயானக் கரையில் அமர்ந்து பஜனை பாடுகிறீர்கள்

இறந்தவர்கள் எழுந்து ஒரு வரிக்கு தாளமிட்டு மீண்டும் கண்மூடிக்கொண்டதாக சிலாகிப்பு வேறு!


மரங்களில் மூக்குரசி ஆக்சிஜனைப் பெற முயற்சித்ததில்

ஏற்கனவே மாண்புமிகு  வைரஸ் குடித்ததுப் போக

மிச்ச சொட்டு ரத்தமும் போகிறது

"போனால் போகட்டும்

ரத்தம் மண்ணுக்கு உயிர் கொரோனாவுக்கு!"

என்று ஆவேசமடைகிறீர்கள்

அமைதி அமைதி

நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள்

ஆய்வகங்களில் கமகமக்கிறது சாணத்தின் வாசம்!


அதோ அங்கே

நாசா விஞ்ஞானிகள் 

தெறித்து ஓடுகிறார்கள்

விரட்டிப் பிடித்து பாரத் மாதாவை வாழ்த்தச் சொல்கிறீர்கள்

தேசபக்தியில் கோமாதாவுக்கே புல்லரிக்கிறது!


ஒரு புள்ளிவிவரம் 'மா' என்கிறது

மாட்டுச்சாணி சோப்புக்கும் கோமியச் சானிட்டைசருக்கும்

சந்தையில் தட்டுப்பாடு.

கெளபதியார் நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பு

கொரோனாவைத் தடுக்க வைக்கோல் மெத்தைகள்!


அதனாலென்ன

தேச பக்தர்களின் விரல்கள் வலுமிக்கவை

கூர் தீட்டினால் போதும்

ராகம் மாறாமல் சொறியத்தக்கவை!

Art : GraphicNerd

Friday, 14 May 2021

ஜி.நாகராஜன் : எழுத்தும் வாழ்வும்

சி.மோகன் எழுதிய "ஜி.நாகராஜன்:எழுத்தும் வாழ்வும்" நூல் கிண்டில் வாசிப்பில் கிடைக்கிறது.சிறந்த வாசிப்பனுபவத்தை தரும் நூல். 

ஜி.நாகராஜன் என்ற ஆளுமையை அவரது எழுத்து, வாழ்வின் ஊடாக சித்திரமாக முன் வைக்கிறது. ஒரு ஆவணத் திரைப்படத்துக்கான தொடக்கத்தோடு காட்சிகள் கண் முன் விரிந்து மெல்ல ஜி.என் என்னும் ஆளுமை விஸ்வரூபம் எடுத்து நிற்கச் செய்கிறது. அவருடைய தனிப்பட்ட வாழ்வில் ஒழுங்கு இல்லை என்று எல்லோரும் கவலையுறும்போது வாழ்வை நெருக்கமாகப் பார்த்து அதனை அனுபவித்து சென்றுள்ளார் ஜி.என்.இது ஒரு வகையில் பிறரால் இப்படியான சுதந்திரமான வாழ்வை வாழ முடியாத ஏக்கத்தையும் சேர்த்தே உணர்த்துகிறது. அவருடைய எழுத்தில் அவர் கடைப்பிடித்த சுருக்கத்தை தன் வாழ்க்கையாகவும் கொண்டு உள்ளார். 

ஜி.நாகராஜன் பற்றிய அறியப்படாத பக்கங்களை செய்தியாக இல்லாமல் கலை நயத்தோடு சி.மோகன் முன் வைத்துள்ளதுதான் பெருங்கலைஞனுக்கு செய்திருக்கும் மரியாதை. ஜி.நாகராஜனுடைய கட்டுரைத்தன எழுத்துக்களிலும் கூட புனைவில் இருக்கும் அதே தெளிவு. ஒரு படைப்புக்கும் அதன் படைப்பாளிக்கும் இடையேயான உறவு எப்படியானதாக இருக்க வேண்டும் என்பதை தர்மு சிவராமின் 'சதுரச் சிறகு' என்ற சிறுகதைக்கான விமர்சனத்தில் ஜி.என் வெளிப்படுத்தியிருக்கிறார். ஞானரதம் அக்டோபர் இதழில் வெளியான அக்கதைக்கு ஜி.என். எழுதிய விமர்சனம் ஞானரதம் ஜனவரி 1974 இதழில் வெளியானது. 

 //ஆசிரியர் தான் படைத்த படைப்பைப் பிறர் பார்க்கவொண்ணாதவாறு அவரே அதை மறைத்துக்கொண்டு நிற்பது போன்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. படைப்பாளிக்குத் தன் படைப்பைத் தன்னிலின்றும் முற்றும் துண்டித்துத் தூர நிறுத்தும் தார்மீக தைரியம் வேண்டும். 'சதுரச் சிறகுக’ளின் ஆசிரியரோ, தானில்லாது தன் எழுத்து நிற்காது என்ற அவநம்பிக்கையில் தானே அதைச் சுற்றிச் சுற்றி வருகிறார். கதைக்கு ஆதாரமான ஆசிரியரின் அனுபவம், இன்னும் ஆசிரியரின் உள்மனதோடு கொண்டிருக்கும் தொப்புள் கொடி உறவை அறுத்து விடுதலை பெறவில்லை போல் தோன்றுகிறது.//

ஜி.என்.னை முதன்மை பாத்திரமாகக் கொண்டு தமிழின் ஆகச் சிறந்த ஆளுமைகள் கதைகள் எழுதி இருப்பதையும் அவற்றைப் பற்றிய பத்திகளையும் சி.மோகன் அற்புதமாக எழுதி உள்ளார்.

ஜி.என் கதைகளில் பொன்மொழிகள் இல்லை என்று புகார் செய்பவர்களுக்காக சில பொன்மொழிகளையும் எழுதி இருக்கிறார்.அதிலொன்றுதான் புகழ்பெற்ற"மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்" அதிகம் அறியப்படாத ஒன்று இது, "மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்று குறையும்."

எழுத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி உள்ள ஜி.என் புற்றக்குடிப் புலவர் என்ற பெயரில் மூன்று கவிதைகள் எழுதி உள்ளார்.அதிலொன்று, 
 
சுய விருந்து

அவன் அல்லற் படுகின்றான்; 
இரங்காதே. 
அவள் தொல்லைப் படுகின்றாள்; 
கசியாதே. 
அவர் இம்சைப் படுகின்றார்; 
உருகாதே. கசிதலும், உனக்கு நீ ஊட்டும் விருந்தே! 
ஆவன இருப்பின் ஆவன செய்; செய்வன இல்லையேல் செல்லுக மேல்!

விளிம்பு நிலை மக்களின் வாழ்வை சுடராகத் தன் எழுத்தில் வைத்து அது மேலும் காலத்தால் துலங்கி பிரகாசிப்பதை நூல் உறுதி செய்கிறது. ஜி.என் .னின் எழுத்து,கட்சி மற்றும் கல்விப்பணி, திருமண வாழ்க்கை,நண்பர்களுடனான நாட்கள் என்று அவரின் ஒட்டுமொத்த வாழ்வையும் பேசுகிறது, "ஜி.நாகராஜன்-எழுத்தும் வாழ்வும்".

கிண்டில் நூலுக்கான சுட்டி:

Saturday, 8 May 2021

அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள் - வாசுகி பாஸ்கர்



 

"அம்பேத்கரின்  அணுகுமுறையை ,சிந்திக்கும் முறைமையை நாம் வேறோருவரையும் விட அம்பேத்கரிடம் இருந்து கற்பதே சரியானது.அதற்கு இத்தொகுப்பு உதவும்" என்று நூலின் தொகுப்பாசிரியர் வாசுகி பாஸ்கர் கூறுவது நிதர்சனம்.

"அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்". இத்தொகுப்பு நீலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னுரை என்பது ஒரு நூலுக்குள் நாம் செல்வதற்கு முன் அந்த நூலை குறித்த ஒரு அறிமுகமாகவே பெரும்பாலும் அமையும். சில நூல்களின் முன்னுரைகள் மட்டுமே வாசிப்பில் கூடுதல் கவனத்தை கேட்கக் கூடிய வகையில் பொருட்படுத்தத்தக்கதாக இருக்கும்.

அம்பேத்கர் ,அவரின் நூல்களுக்கு எழுதி இருக்கும் முன்னுரைகள் நூலின் பொருண்மைக்கு வலுச் சேர்க்கின்றன.அம்பேத்கரை அதிகம் வாசிக்காதவருக்கும் கூட அவரைப் பற்றிய வரைகோட்டை தந்து விடுகின்றன.

புத்தம் ,இந்து மதம்,சூத்திரர்கள்,சாதியை அழித்தொழித்தல்,காந்தி என அம்பேத்கரோடு அடிக்கடி வரலாற்றில் சேர்த்தே உச்சரிக்கப்படும் வார்த்தைகளின் பின் இருக்கும் அம்பேத்கரின் நிலைப்பாட்டையும் தாண்டி பல்வேறு பொருண்மைகளைப் பேசும் இந்த எழுத்தின் மூலம் ஒரு வாசகன் அம்பேத்கரை கூடுதலாக நெருங்க இத்தொகுப்பு வாய்ப்பளிக்கிறது.

பல விவகாரங்களில் அம்பேத்கர் அவரின் கருத்தில் எவ்வளவு உறுதியாக இருந்து இருக்கிறார் என்பதை  உணர முடிகிறது.தலித்களுக்கான சுதந்திரத்தை அவர்கள்தான் போராடி பெற்று கொள்ள வேண்டும் .பிற அமைப்புகள் அதை முன்னெடுக்க முயலும்போது ஏற்படும் விடுதல்கள்,நிபந்தனைகளோடு அது நிறைவை அடையாத சூழலுக்கு எவ்வாறு தள்ளப்படுகிறது என்பதை அவருடைய அனுபவங்களின் மூலம் தெளிவுறுத்துகிறார்.
ஆனாலும் கூட அவர் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம்  தலித் மக்களுக்கான விடுதலையை பெறும் முயற்சியை முன்நகர்த்துகிறார்.

அம்பேத்கர் இந்த முன்னுரைகள், நூல்களின் மூலம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்.அதில் இன்றும் ஒரு சாதி இந்துவால் பதில் அளிக்க முடியாத கேள்விகள் பல உள்ளன.
"தீண்டப்படாதோர் கிராமத்துக்கு வெளியே ஏன் வசிக்கின்றனர்?மாட்டிறைச்சி தின்பது ஏன் தீண்டாமைக்கு இட்டுச் செல்கிறது?இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உட்கொண்டதில்லையா?பிராமணல்லாதவர்கள் மாட்டிறைச்சி தின்பதை ஏன் கைவிட்டார்கள்?பிராமணர்களை சைவ உணவு உண்பவர்களாக ஆக்கியது எது?" எனக் கேள்விகள் நமக்குள்ளும் நீளுகின்றன.

மேலும் வாசிப்பின் போது சமகால அரசியலைச் பொருத்தி பார்ப்பது எனக்கு இயல்பான ஒன்று.அம்பேத்கரின் பல்வேறு கூற்றுகள் எதிர்காலத்தை அவர் தெளிவாக அனுமானித்துள்ளதாக உணரும் நான் கீழ்காணும் அவரின் கூற்றையும் அவ்வாறே கொள்கிறேன்.
"என்றேனும் ஒரு நாள் முஸ்லீம்கள் வகுப்பு நோக்கங்களுக்காகவும் இந்துக்கள் பொருளாதார நோக்கங்களுக்காகவும் மத்திய அரசாங்கத்தை ஒழித்துக் கட்டுவதற்கு கைகோர்ப்பது சாத்தியமே" என்கிறார்.இந்த பத்தியை இன்றைய சூழலுக்கு தனியாக நாம் விளக்க வேண்டியதில்லை.
மத்தியில் அதிகாரத்தைக் குவிக்கும் போக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே இருக்கிறது.இன்றைய பா.ஜ.க அரசு அதில் இன்னும் மோசமாகவே நடந்து வருகிறது."ஒன்றிய ஆட்சி வேண்டும்" என்று தென்னிந்தியாவில் தமிழ்நாடும் கேரளமும் உரக்கக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.
மத மாயைகளைத் தாண்டி பொருளாதார சுரண்டலை மக்கள் உணர்ந்து கொள்ளத் தொடங்கி விட்டனர்.இந்துக்கள் என்ற பெயரில் இவற்றையெல்லாம் மறைத்து விட  எண்ணும் முயற்சிகள் கண்டிப்பாக எடுபடாத காலம் நெருங்கி வருகிறது.
இந்துக்கள் பொருளாதார சுரண்டலுக்கு எதிராகவும் இஸ்லாமிய சமூகம் வகுப்புவாத பெயரில் நிகழ்த்தப்படும் அநியாயங்களுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுவர் என்று நான் இக்கூற்றை சமகாலத்தின் தேவையாகப் பொருத்தி பார்க்கிறேன்.

இதுபோன்று மத்திய அரசால் மாநில பொருளாதாரம் சுரண்டப்படுதல்,பாகிஸ்தான் பிரிவினை,ரூபாய் பிரச்சனை எனப் பொதுச் சமூகத்தில் பரந்துப்பட்டு பேசப்படாத அவரின் ஆய்வு நோக்கிலான எழுத்தின் ஆளுமையையும் இத் தொகுப்பு சேர்த்தே அறிமுகம் செய்கிறது.

இவ்வாசிப்பு அம்பேத்கரின் சிந்தனையை மேலும் தேடி வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தை அறிவு தளத்தில் நிகழ்த்துகிறது.

மிகுந்த கவனத்தோடும் பொறுப்புணர்வோடும் கட்டுரைகளைத் தொகுத்துள்ள வாசுகி பாஸ்கரின் பணி, காலத்தின் கடமை.