Showing posts with label கவிதை விமர்சனம். Show all posts
Showing posts with label கவிதை விமர்சனம். Show all posts

Wednesday, 2 December 2020

இரவின் பாடல் ததும்பும் காமத்தின் ஒளி

(ரொட்டிகளை விளைவிப்பவன் நூலை முன்வைத்து ந.பெரியசாமி எழுதிய விமர்சனம் 2020 செப்டம்பர் நிலவெளி இதழில் வெளியானது) 

லோலாக்கு அணிந்த காதுகள் அரிதாகின. நினைவில் அரிதானவைகள் தோன்ற அது நிரம்பிக் கிடந்த நாட்களில் பயணிக்கத் துவங்கிடுகிறோம். எதுவும் நிலைத்திருப்பதில்லை. நிலைத்திருக்க விடுவதுமில்லை. பயன்படுத்துபவர்கள் நாமாக இருந்தபோதும். நம் விருப்பங்களை பொருட்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன்களே. அதிகாரத்திலிருக்கும் அவன்களால் ஏற்படும் இழப்பு நட்சத்திரங்களின் எண்ணிக்கையாகிறது. காதோரம் லோலாக்கு கத சொல்லுதடி எனும் பாடல் வரிகள் லோலாக்குகளை ரசித்திருந்த நாட்களை மீட்டெடுப்பதுபோல் நம் இழந்த வாழ்வை மீட்டெடுக்கின்றன ஸ்டாலின் சரவணனின் ரொட்டிகளை விளைவிப்பவன் கவிதை தொகுப்பு. 

காற்று திறக்காத வரை 
தனக்குப் பின்னால்தான் 
பெருங்கடல் 
மறைந்து கொண்டிருப்பதாக 
எண்ணியிருக்கும் 
சிறு சன்னல். 
தொகுப்பின் துவக்கத்தில் இருக்கும் இக்கவிதையில் உள்ள சிறு சன்னலை நான் கண்களாக கொள்கிறேன். கண்களை மூடிக்கொள்ள எதுவும் சாத்தியமே. இச்சாத்தியத்தை நிகழ்வில் பொருத்துதல் எல்லோருக்கும் வாய்த்திடாது. பெரும்பாலானவர்களுக்கு ஆசைஇ கனவு என்ற நிலையிலேயே பதங்கமாகிவிடும். ஆனால் அதிகாரத்தில் இருப்பவனுக்கு சாத்தியமே. அவர்களின் கனவு ஆசை அனைத்தையும் சாத்தியமாகிக் கொண்டிருப்பதற்கு நாமே சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 'செம்புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி' கவிதையில் எளியோனின் ஆசையும்இ அதிகாரத்தின் ஆசையும் என்னவாக செயல்படுகிறது என்பதன் காட்சியாக்கம் நிதர்சனம். வாழ்வின் ஈரம் காய்ந்த பெண்ணொருத்தியின் அழுகுரலில் நம்மையும்இ பொக்லைன் முகம் தவலும் அமைதியில் அதிகாரத்தையும் கண்டுகொள்ள முடியும். 'கண்ணாடிப் போத்தலில் தெறித்த மூடியென வாழ்வு' கவிதையில் எளியோன் மதுவில் கிடப்பதுஇ அதிகாரம் தனி வார்டு அமைத்து அவனது உடமைகளை பறிப்பதுஇ 'காரம் நிமித்த இரவுகள்' கவிதையில் அல்சர் நோயாளிகளை உருவாக்கும் அதிகாரம் அவனையே பகடியாக்கி பார்த்து ரசிப்பதும் நல்ல வெளிப்பாடு. 

'ஞாயிறு போற்றுதும்' கவிதையில் எலும்புத் துண்டிற்காக எச்சிலொழுக காத்திருக்கும் வறிய நாக்குடையோருக்கும், கொழுத்த வயிருடையோருக்குமான அரசியல், 'ஒரு மரியாதை நிமித்தச் சந்திப்பு' கவிதையில் கர்த்தரையும் அய்யனாரையும் சந்திக்கச் செய்து கேட்டும் தட்டியும் நின்றுகொன்டிருக்கும் காலம் இதுவல்ல. உடைப்பை ஏற்படுத்தவேண்டிய காலம் இதுவென நினைவூட்டுகிறார் ஸ்டாலின். 

'குருதி வழியும் சக்கரப் பற்கள் ' கவிதை நாவலுக்கானது. தஞ்சை போன்று நிலமும் விவசாயமும் நிறைந்த பகுதிகளில் முதன்முதலாக ட்ராக்டரை பார்த்தபோது மக்களிடையே உண்டான அச்சம் எத்தகையானதென்பதை நம்மால் அறிய முடியும். மனித சக்தியை நம்பிக் கிடந்த முதலாளிகளுக்கு இயந்திரம் செல்லப்பிள்ளைகளானது. அறிவியல் எளியோனை பசித்த வயிறோடு அலையச் செய்தது. அதன் வியப்பை கண்டு வியந்தவன் வாயில் மண்ணை தள்ளி மகிழ்தது. நிலம் கடந்து இப்போ கம்பெனிகளில் அதன் அமித்ஷாதனத்தை தினம் எதிர்கொண்டு வாழ்கிறோம். நீண்டகால அனுபவத்தின் அறிவு செல்லாத பணமாகியது. புறக்கணிப்பின் வலிநீக்கியாக கலை இருப்பதால் பித்தாகவேண்டியோரின் எண்ணிக்கையை மட்டுப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் இக்கவிதையை வெகு நேரத்தியோடு காட்சிபடுத்தியுள்ளார். நிலத்திற்கு ஒவ்வாத ஒன்று வருவதை ஏற்க மறுக்கும் அந்நிலம்வாழ் உயிரிகளின் நிலையை காட்சிபடுத்தி, பின் மக்களின் வியப்பை காட்டி, இயந்திரத்தின் பசியைக் காட்டிஇ முத்தமிடும் முதலாளியின் வக்கிரத்தை சொல்லி, 

திருகாணிகள் தொலையாத வண்ணம்
பாதுகாப்பதைத் தவிர
ஏதும் வழியற்றவன்
நெஞ்சிலறைந்து அழுகையில்
சுடச்சுட விழும் ஒரு துளி
நூற்றாண்டு மூத்த கிழவனது. எனும் கவிதையின் முடிப்பிலிருக்கும் துளி இன்றளவும் சொட்டிக்கொண்டே இருக்கும் மூதாதைகளின் கரிப்பை நம் உடலும் உணர செய்திடுகிறார். இக்கவிதையின் நீட்சியாக 'ரொட்டிகளை விளைவிப்பவன் ' கவிதையை வைத்திருப்பது முந்தைய கவிதையின் வாசிப்பு மனநிலையை அப்படியே வைத்திருக்கச் செய்திடுகிறது. முதலாளிகள் வித்தை அறிந்தவர்கள் எவனிடம் எப்படி வேலையை கரக்க முடியும் எனும் அரிச்சுவடி அவர்களின் கவசகுண்டலம். விவசாய வேலையின் அனுபவத்தை பரோட்டா மாஸ்டராக மாற்ற செய்திருக்கும் லாவகம் அபாரமாக வெளிப்பட்டிருக்கிறது. பாலையாக்கப்பட்ட நிலத்திலிருக்கும் தலைவிக்கு அவன் வெற்றி நீர்வார்க்கும் செய்தியாக இருப்பது காலத்தின் அவலம். வெடித்துக் கிடக்கும் நிலத்தின் கதறல் நம்மின் கதறலாகவும் மாற்றம்கொள்ளச் செய்திடுகிறது கவிதை. நிலத்தினுள் மண்புழுவாக வாழ்பவனால்தான் இக்கவிதை சாத்தியம். ஸ்டாலின் மண்புழுவாக வாழ்ந்திருக்கிறார். 

சாத்தியப்படும் சூழலில் எல்லாத் தொடர்ந்து உலகமயமாக்கலினால் உண்டாகும் துயர்களை பாடிய பாணன் யவனிகாவிற்கு இக்கவிதைகளை சமர்ப்பித்திருப்பதில் ஸ்டாலினின் நுட்பத்தை உணரமுடிகிறது. துயரமும் வலியும் அடர்ந்து கிடக்கும் இப்பகுதியில் 

அவளைப் படுக்கையில் தள்ளுகையில்
காதில் விழும் குக்கர் சப்தம்
கலவிக்கான சங்கீதம். 

எனும் வரிகளில் ஸ்டாலின் மீட்பராகிடுகிறார். 

பெரிதினும் பெரிது கேள் நாம் உழன்று சிக்கிக்கொள்ளாமல், சிறிதினும் சிறிதாக ஆசைகொள்ள இடர் அகற்றி மகிழ்வை கண்டடைந்திடலாம். குளமாகி குளத்தின் படியாகி நனைய முடியாத வாழ்வை விட தினம் நனையும் சிட்டுக்குருவியாதல் அழகென காட்டும் இக்கவிதை வசீகரம் மிக்கதாக உள்ளது. 

குளக்கரையின் 
மேலிருந்து கீழிறங்கும் 
மூன்றாவது படிக்கட்டு 
நனைவதற்கு 
 நெடுங்காலம் ஆகிவிடுகிறது 
சிட்டுக் குருவியோ 
படிகளில் தாவித் தாவி 
தினம் நனைகிறது. 

கொடியது வாழ்வின் இழப்பை அறிந்துகொள்ளும் தருணம். ஸ்டாலின் சரவணன் நிறைய்ய வலிகளை நினைவு படுத்தியபடியே இருக்கிறார். மணலுக்கு மாற்றாக வந்திருக்கும் எம் சேண்ட்டை கைகளில் அள்ளிப் பார்க்க மலையின் கணத்தை உணருபவர்களால் இயல்பாக நகர்ந்திட முடியாதோ அவ்வாறாகத்தான் ' முன்பு மலையென்றிருந்தது' கவிதையை கடப்பதும். 

என்றைக்கும் எங்களோடு வாழ்ந்துகொண்டிருப்பவன் வே.பாபு. அவனுக்காக எழுதப்பட்ட அஞ்சலி கவிதை மீண்டும் அவனுடனான நாட்களைத் தத்தது. அக்கவிதையில் வீழ்ந்த நீர்துளிகள் அவன் உருவைக்காட்டி மறைந்தன.
 தேவாலய மெழுகுவர்தியினின்று
 கைக்கொண்ட சிறு வெளிச்சத்தோடும்
 ஓடுகிறான் கவிஞன்.
 எனும் வரிகளில் பாபுவை கட்டிவைத்துள்ளார் ஸ்டாலின். இக்கவிதை இருக்கும் இப்பகுதி யூமா வாசுகிக்கானதாக இருப்பது அத்தனை பொருத்தப்பாடு. எப்பொழுது அவருடன் உரையாடினாலும் மூவருக்குமான தனித்த நாட்களை நினைவூட்டியபடியே இருப்பார்.

 சமூகத்தின் பொதுபுத்தியில் இருக்கும் ஒழுங்கை ஆகச் சிறந்ததென முடிவுசெய்து அதில் ஒரு மில்லிமீட்டர் மீறலை செய்திட்டாலும் மிகுந்த பயமுறுத்தலைச் சொல்லி பத்திரமா இரு, பத்திரமா இருவென கண்டிப்புகளோடு குழந்தைகளை குழந்தமை இல்லாது, தனித்துவங்களைக் கண்டடைந்து கொண்டாடத் தவறிட்ட தறுதலைச் சமூகத்தின் அவலத்தை காட்சிபடுத்துகிறது இக்கவிதை.

தாய்த் தவளை
 குட்டிகளுக்குச் சொல்லியது
  குதிக்கையில் கவனமாய் இருங்கள்
 அதோ!
 வானத்தில் தலையிடிபட்டு
 மாண்டுபோன
 மூத்தக் குடியின் கல்லறை'

 இக்கவிதையின் நீட்சியாக இப்படியாக வளர்க்கப்படும் குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்தபின் அதிகார வர்க்கத்தின் எதிர்பார்ப்புகளை நிவர்த்திக்கும் வகையில் எப்படியான அடிமை வாழ்வை வாழ்கிறார்கள்இ வாழ்வார்கள் என்பதை காட்டுவதாக உள்ளது ' மிச்சசொச்ச வாழ்வின் சாம்பல்' கவிதை. காமம் மனவெளிப்பாடு. நினைவுகளின் தன்மைக்கேற்ப அதன் பிறப்பு இருக்கும். அவரவரின் வாழ்வியல் சூழலே இதற்கு ஆதாரம். அவ்வப்போது உண்டாகும் காமத்தின் புள்ளிகள் ததும்பும் கோலமாக பிரவகிக்கும் தருணம் மகத்தானது. இரவின் இக்கோலம் நமக்கானது. நம்மை கொண்டாட்டத்தில் வைத்திருப்பது. இது எல்லா இரவுகளுக்குமானதும் அல்ல. வகைமைகள் நிறைந்த காமத்தை இரவின் பாடலாக்கும் ஸ்டாலின் முதன்மையாக நிதானத்தில் இயங்கும் காமத்தைக் காட்டிஇ காய்ந்த சருகில் விழும் நெருப்பான காமத்தை பற்றவைத்து கூந்தலில் சொட்டும் வெள்ளத்தின் மீந்த துளிகளில் நமை சிலிர்க்கச்செய்து நமக்கான காமத்தை நினைவூட்டி வனப்பறவைகளாக நமை உருமாற்றம் கொள்ளச் செய்கிறார். இரவின் பாடல் ஒளி ததும்பும் ஆறு.

 சொற்கள் மகோன்னதமானவை. எதையும் சாத்தியமாக்கும். ஒரு கவிதைக்குள் இருக்கும் சொற்கள் நமை படுத்தும் பாடு அறிந்து அனுபவிப்பவர்கள்தானே. இயங்கியபடியே இருக்கும் காலத்தை கொண்டு எல்லா காலங்களிலும் போய்வரச் செய்யும் மாயங்களைச் செய்யக்கூடியது. 'அதனாலென்ன...' கவிதையில் அப்படியானதொரு மாயத்தை உணரலாம். நம்மை குழந்தையாக்குதல்இ நாமே குழந்தையாதல், குழந்தைமைக்கும் நமக்குமான ஊடாடலென பல தளங்களில் கவிதை நமை பயணிக்கச் செய்திடுகிறது. இக்கவிதையின் தொடர்ச்சியாக 'காலக் கம்பியிலாடும் சிறுபாதங்கள்' கவிதையைக் காணலாம். இக்கவிதை வெகு நேர்த்தியாக பின்னப்பட்டு நல்ல குறும்படம் ஒன்றை கண்ட மனநிலையைத் தருகிறது.

 அவளின் ஞானப்பல் தொட்டுத்
 திரும்பும் ஒவ்வொரு முறையிலும்
 தொலைந்து மீளுமவன்
 குழந்தையின் கையில்
 பனைவெல்லமாய் ஆகிறான்
 எனும் 'மெய்முழுக்கு' கவிதையில் வரும் வரிகள் நமை பனைவெல்லமாய் மாற்றுகின்றன. குழந்தைகள் வித்தைக்காரர்கள். அவர்கள் நாம் அவர்களை வளர்ப்பதாக நம்பி கெட்டித்துக்கிடக்கின்றோம். உண்மையில் அவர்கள்தான் நம்மை வளர்த்தெடுக்கிறார்கள். நம் மனத்தடைகளை விலக்கி குழந்தையாக தெரிந்துகொண்டால் போதும் வாழ்வில் பெரும் பொக்கிசங்களை கண்டடையலாம். யூமாவாசுகி போன்றோர் குழந்தையாக தெரிந்திருப்பதால்தான் அவர்களால் தொடர்ந்து சிறார் இலக்கியங்களை படைத்துக்கொண்டிருக்க முடிகிறது. ஸ்டாலினின் இக்கவிதை வாசிப்பவர்களை சில கணமாவது குழந்தையாக்கும்.

 மோசமான விபத்திலிருந்து மீண்டவனை சாவை பார்த்து வந்தவன்இ சாவை வென்று வந்தவன் என்றெல்லாம் சொல்வதுண்டு. மரணபயம் என்பதையே எதிர்கொள்ள தயங்கும் நமக்கு மரணம் குறித்த புரிதல்கள் வெவ்வேறானவை. புறத்தால் ஏற்படும் பாதிப்புகள் சரிசெய்துகொள்ளக் கூடியவை. அகத்தில் உண்டாகிட்ட பயம்தான் நம்மை ஆளத்தொடங்க எல்லாவற்றிலுமிருந்து விலகத் தொடங்கிடுகிறோம். 'விளரிப் பண்' கவிதையில் மரணத்திடம் மண்டியிட்டு கைவிரித்து ஒப்பளிக்க சொல்கிறார். எதுவொன்றிலும் நாம் நமை ஒப்பளிக்க அது குறித்த புரிதலை அடைய முடியும். இப்படியான மனப்போக்கு கைவரப்பெற்றவர்களால் வலியை நேசிக்க முடியும். வலியால் காதலை உணர்ந்து எத்தகைய வலியையும் தாங்க முடியும். சிறு முத்தம் வலியிலிருந்து விடுதலை அடையச் செய்யும் என்கிறார் ' சீழ் மணக்கும் காதலொன்று' கவிதையில்.

 ஆதார் எண்ணுக்கு தோட்டாக்களை ஊட்டுதல், குத்துக்காலிட்டு அமரும் மனப்போக்கு, சமூக விரோதமாக்கப்பட்ட உணவு பழக்கமென அதிகாரத்தின் கீழ்மையை எள்ளலோடு வெளிப்படுத்தல்இ அடிக்கடி திறந்து காட்டப்படும் உடல் சீக்கிரம் அலுப்பை ஏற்படுத்துமெனும் வாழ்தலின் மீதுள்ள நேசிப்புகள், கரிப்பு சுவையேறிய முலைகளோடு இருப்பவளுடனான அகத்தினைப் பாடல்கள் என தொகுப்பிலிருக்கும் சிறு குறிப்பு வரைதல் கவிதைகள் மூன்றும் முத்துக்கள்.

 புறத்தின் வலி, அகத்தின் அமைதி நிலை, அறியச்செய்யும் குழந்தமை, காதலின் உன்னதம், காமத்தின் மகோன்னதம், கீழ்மைமிகு அதிகாரத்தின் குரூரம்இ எளியோரின் மனப்போக்கு என பெரும் பயணிப்பை நமக்கானதாகவும் மாற்றியுள்ளார். கவிதைகளில் உரைநடை தன்மை மிகுந்து வாசிப்பில் சலிப்பை உருவாக்க இருக்கும் கணத்தில் கவித்துவமான சொற்கள் நமை நிமிர்வு கொள்ளச் செய்திடுகின்றன. தெளிந்த நீரோடையில் பளிங்காக மிளிர்ந்திடுகிறார் ஸ்டாலின் சரவணன்.

Tuesday, 1 December 2020

காத்திர மொழி

(ம. கண்ணம்மாள் அவர்கள் எழுதிய விமர்சனம் 2019 செப்டம்பர் உயிர்மை இதழில் வெளிவந்தது) 

ஸ்டாலின் சரவணனின் ரொட்டிகளை விளைவிப்பவன் கவிதை நூலினை முன்வைத்து: 

ஆதிகாலத்திலிருந்தே மனிதர்களின் சமூக நடத்தை முறைகள் சமூகப் பண்பாட்டுப் பகுப்பாய்வுக்குட்பட்ட முழுதளாவிய பரந்துப்ட்ட பார்வையைக் கொண்டுள்ளன. பழம்பெரும் நாகரிகத்தின் தொன்பட்ட பூர்வீகக்குடி மாந்தரினமாகத் தம் பண்டைய வாழ்க்கை முறையில் பதிவு செய்து பரப்பியுள்ளதும் அறியலாகிறது. புராதன மனிதன் தன் நிலைக்குட்பட்ட காரணகாரியத்தோடு இயற்கையோடிணைந்து சமூகத்தில் வாழத் தலைப்பட்டான். அவரவர் வாழ்ந்த நிலத்தின் இயல்புகளுக்கேற்ப அவரவர் வாழ்வுச் சூழலும் மாற்றத்திற்குள்ளாயின. மாறிக்கொண்டேயிருப்பதுதான் வாழ்க்கை. அது இயற்கை நிலைமைகளையும், வரலாற்றுக் கட்டமைப்புகளையும், பல்வேறு வர்க்கப் பகுப்புகளையும், பண்பாட்டுச் சூழலையும் தம்முள் கொண்டது. இத்தகையநிலை மனிதர்களின் மாற்றத்திற்குச் சமூகத்தையும், நிலப்பகுப்பையும் உள்ளீடாகக் கொண்டு பல வேறுபட்ட நிலைகளை உணர்த்தியுள்ளது. இது சமூகத்தின் வளர்ச்சிப் போக்கு, சமூகமென்பது மனிதர்களைக் கைக்கொண்டது. மனிதர்கள் நிலத்தைக் கைக்கொண்டனர். நிலம் பரந்துப்பட்ட காலமாற்றத்திற்கேற்ப, சமூக மாற்றத்தை மனிதர்களுக்கு வழங்கத் தொடங்கியது. அதனுள், அரசு, தலைமை, உடைமை, அகம், புறம் என்ற பகுப்பு ஆட்கொண்டிருந்தது. இப்படியொரு தடம் பதித்து மெல்லக் கை பரப்பி வந்த மனிதச் சமூகம் தம் வாழ்வியலில் நிலத்தையும், சமூகத்தையும் ஒன்றாக நோக்கியது. நோக்குதலென்பது ஒவ்வொருவரிடமும் வேறுபடும். ஒரு வாய்மொழிக் கூற்றுக் கூடச் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். எனவே, சொல்லும் சொற்கள்தாம் அங்கு முதன்மைப் பெறுகின்றன. அப்படிப் பார்க்கும்போது, சொற்கள் பல சொற்கூட்டங்களாக மாறித் தம்மையொரு படைப்பாக முன்னிறுத்திச் சமூக மாற்றத்திற்கு இழுத்துச் செல்கின்றன. 

அப்படைப்புக் கவிதையாக, கட்டுரையாக, புதினமாக, சிறுகதையாக, ஏற்புச் செய்தியாக, மறுப்புச் செய்தியாகவோ எதுவாக இருந்தாலும் ஆளப்படும் சொற்களும், அமிழப்படும் கருத்துக்களும் மட்டுமே படைப்பைப் படைப்பாக்கி நிமிரச் செய்கின்றன. அவ்வகையில் சமூகத்தின் பல மிஞ்சிய தடுமாற்றங்களை அனுபவங்களைப் பார்க்கப்படும் பார்வைக்கேற்ப, காத்திரமாக எடுத்துச்சொல்லும் போது எந்தப் படைப்பும் பேசப்படுகின்றது. இதுவே, உண்மை. எண்ணிக்கையற்ற சொற்களாய்க் கடந்து கொண்டேயிருக்கும் நாட்பொழுதுகளின் தனிமையும், நினைவும், அவலமும், அன்பும், அரசியலும், அகமும், தேடலும், வேட்கையும், நெய்யப்பட்டு அழகானதொரு கவின்மிகு ஆடை எப்பொழுதும் நம்மேல் போர்த்தப்படுகின்றது. அது துணியால் நெய்யப்பட்டதன்று. சொல்லால் நெய்யப்பட்ட ஸ்டாலின் சரவணனின் ரொட்டிகளை விளைவித்தவன் என்ற சொல்லாடை இந்த மனிதர்களையும், நிலத்தையும், வாழ்வியலையும், புரிந்துகொள்ளலையும் தன் சொற்களின்வழி நெய்து தந்துள்ளார். அது பித்தேறிய சொற்களாய் நாட்பொழுதுகளின் பாடுகளைப் பிட்டுபிட்டு வைத்துப் பேசுகின்றது. 

ஒரு தொடர் வாசிப்பே உருமாற்றம் செய்துக்கொள்ள உதவும். அவ்வகையில் கவிஞனின் அனுபவங்கள் நம்மை நீந்தச் செய்கின்றன. நீந்துதற்கு அனுபவம் தேவை அது நீர்நதியாகயிருந்தாலும், வாழ்க்கை நதியாகயிருந்தாலும் வாழ்வியல் அனுபவங்களே மனிதர்களைத் தொட்டுச் செல்லும். அது எதார்த்தமாக, கவித்துவமாக, இடம் சார்ந்ததொரு தூண்டலாக, கற்பனையாக, மொழியைக் கையாண்டு கவிதையினை ஒட்டுமொத்த உணர்வுக் கலவையாக விரிகின்றது. விரிக்கச் செய்கின்றது. வாசிக்கும் நாமும் விரிந்துதான் போகின்றோம். 

நிலப்பகுதிகள் முழுதும் தங்கி நிலைத்து வாழத் தலைப்பட்ட இம்மனித சமுதாயம் இயற்கைச் சூழலுக்கேற்பத் தத்தம் நிலத்திற்கேற்ப வாழ்வியல் நிலைகளை வகுத்துக் கொண்டது. இந்நிலம் சார்ந்த புரிதலும், பார்வையும் ஸ்டாலின் சரவணனின் கவிதைகளில் பொதிந்துள்ளன. மனிதர்கள் வாழும் நிலம் அமைதியாக இருந்தால் அரசுக்குக் கொண்டாட்டம்தான். எதிர்க் கேள்விக்கணைத் தொடுக்க வாய்ப்பில்லையெனில் ஆள்பவரின் நிலை அட்டகாசம்தான். இங்கு அமைதியே பிரதானம், நிலத்தைக் கையகப்படுத்திச் செடியிலிருந்து பூக்களைப் பறிப்பதுபோல் குடியிருப்புகளைப் பறித்து வீசும் பொக்லைன், நிலத்தின் எதிரியாய், அரசின் கைப்பாவையாய், சொன்னதைச் செய்யும் மின்னியந்திரமாய் நம்முள் காட்டப்படுகின்றது. அரசின் ஏகாதிபத்தியம் கண்டு முதிர் பெண்ணொருத்தியின் அழும் குரல் ‘செம்புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி’ வருவது வீடிழந்தவர்களின், நிலமிழந்தவர்களின் மனம் படும் துயரம் அவலக் காட்சியாய்க் கண்முன் விரிகின்றது. 

வாழ்வின் ஈரம் காய்ந்த 
வயதான பெண்ணொருத்தி 
ஓட்டுக் குடிலுக்குள் 
பெருங்குரலெடுத்து அழுகிறாள் 
பொக்லைன் முகத்தில் 
அமைதியோ அமைதி இவ்வடிகளில் 

அதிகாரத்திலிருப்பவர்களின் மூர்க்கமான வேட்டை, உடைந்து போன கண்ணாடியின் சில்லுகள் உடம்பில் குத்தி வெளியேறும் வலிக்கேற்பச் சொல்லப்பட்டுள்ளது. அது, குருதி கொப்புளித்து பீறிடும் வலியாகவே உணரப்படுகிறது. 

நிலமில்லாத இடத்து ஒரு மனிதன் எவ்வாறு வாழ முடியும்? முடியாது. நிலமே மக்கள் வாழ்வதற்குரிய தேவைகளைத் தந்து சமகாலப் பிரச்சினைகளை நீக்குகிறது. இது ஒரு கால மாற்றம். சுழற்சி அடிப்படையே இதன் சாத்தியக்கூறு. நிலம் நம்மின் உயிரோட்டமான நெருக்கம். ஒவ்வொருவரின் எண்ணிக்கையற்ற பொழுதுகளின் தனிமை, நினைவு, ஏக்கம், இன்பம், துன்பம் போன்ற எல்லாமும் நிலம்தான். இதை இழந்த ஒருவனின் நிலை ரொட்டிகளை விளைவிப்பவனாக காட்சி உருமாற்றிக் கொள்கிறது. தனக்குத் தெரிந்த நிலம் சார்ந்த வேலைகள் பட்டியலிடப்பட அதுவே ரொட்டித் தயாரிப்பதற்குரியதோடு லாவகமாகப் பொருத்தப்பட்ட கவிதையானாலும் விளைச்சலில்லாத வறண்ட நிலத்தில் விளைவிக்க முடியாதவன் ரொட்டிகளை விளைவித்த மனிதனாகிறான். அங்கு, ‘விவசாயி’ பெயர் மறைந்து ‘பரோட்டா மாஸ்டர்’ உருவாகிறார். இது காலக்கொடுமை தான். வாழ்வாதாரம் எதை நோக்கிச் செல்கிறது? நீரின்றித் தவித்தலைந்து தம் வறண்ட நாக்கை தணித்துக்கொள்ள நிலம் தவிக்கின்றது. வயிற்றுக் கொடும்பசியில் காங்கையாய்த் தகிப்பதுபோல நிலம் வெடித்துப் பாளமாய் கிடக்கிறது. காங்கை ஒவ்வொரு ‘பரோட்டா மாஸ்டர்களை’ உருவாக்கி அழகு பார்க்கிறது. 

இங்கு சர்வாதிகாரம், விவேகமாய் மனிதர்களை முடிச்சுப்போட்டு இறுக்குகிறது. இக்கவிதை உடைந்துபோன சமூகத்தின் சாட்டையடி, வலியுணர்ந்தவர்களுக்கே அடியின் தாக்கம் உணரமுடியும். 

மேல் மண்ணைக் கீழாக 
கீழ் மண்ணை மேலாக 
உருட்டும் மண்புழவாய் 
சில புரட்டல்களுக்குப் பின் 
பெரு நகரத்துக்குக் கிடைத்திருப்பது 
இன்னொரு பரோட்டா மாஸ்டர் 

துயர் மிகுந்த சோக வலியினை உள்ளிழுத்துக் கொண்டே நடக்கும் அடிகள் இவை. வாழ்வின் நிழல் புறத்தோற்றங்களை உண்மையாக எடுத்தாளும் கடும் பாதிப்பை வெளிப்படுத்தும் மனித வாழ்வைத் தரைமட்டமாக்கும் நிலையே இதில் தெரிகின்றது. 

மனிதகுல வரலாற்றில் மாந்தரினம் எதிர்கொள்ளும் சிக்கல்களும், முரண்களும் காலத்தின் உராய்வில் அழந்துப் போகுமாறு இல்லாமல் முழுமையாகவே இருக்கின்றன. இங்கு யாரும் யாருக்கான பாதையை உருவாக்கித் தரவில்லை. அவரவர் பாதையை அவரவரே தீhமானிக்க வேண்டும். அதுவே இலக்கு. அதுவே தடைக் களைதல். அதுவே வெற்றிக்கானவழி. இதில் வெற்றி, தோல்வி முக்கியமல்ல. அனுபவம் மட்டுமே முக்கியம். எந்தவொரு அனுபவமும் நமக்கு மறுநிர்மாணத்தைக் கையில் வழங்கும். அதை நாம் பிடித்துக்கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் இதெல்லாம் சாத்தியமா? இதற்கு ஸ்டாலினின் ‘செம்மறிகளுக்கென்று ஒரு பாடல்’ பதில் சொல்கிறது. முதலாளித்துவ உலகமிது. உலகமயமாக்கல், நிகழ்கால கருத்துருவாக்கங்கள் என்ற முரண்பாட்டில் சிக்குண்டுள்ள இச்சமூகம் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் சமூகமாக மாறியுள்ளது. இந்த உலகம் இனிது. அதை ஏற்படுத்திய தேவனுடன் தன் பங்களிப்பை மக்களுகு;கு வழங்கிக் கொண்டேயிருக்கிறார். அது ஒரு இiசாயகப் பரவி மக்களை ஊடுருவுகிறது. மகிழ்ந்துத் திளைந்திருந்த மக்களை, இசையிலிருந்து பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டு வைக்கிறான் எவனோ ஒருவன். அங்குத் தேவனிசைத்த நல்ல இசையில்லை. சுதந்திரமான விருப்பமில்லை. அடிமைத்தனமும், கட்டுப்பாடும், ஒப்பந்தமும், விதிக்கப்பட்டக் கூலியும், சுரண்டப்பட்ட உழைப்பும் கை விரிக்கின்றது. இதையறியாத மக்கள் கூட்டம் தலையாட்டும் செம்மறிக் கூட்டமாய் அதில் போய் விழுகின்றனர். இதைக்கண்டு தேவன் மரித்துப் போகிறார். இசையும் நிற்கின்றது. 

இந்தச் செம்மறிகளுக்காக 
மேலும் இசைக்க விரும்பாத தேவனோ
யாரும் எதிர்பாராமல் 
மலையிலிருந்து குதித்து மரித்தார் 
அந்நேரம் 
ஒப்பந்தக் காரனொருவன் 
வேலைக்கு ஆளெடுக்க வர 
கூட்டம் அங்கே முண்டியடித்து முன்னேறியது 

என்ற அடிகளில் மக்களின் உழைப்பு, காத்திருத்தல், முயற்சி, வேலை எல்லாம் சுரண்டுப்பட்டுத் தன்னிச்சையான பணியில்லாது இயந்திர உலக ஆதிக்கத்தில் இயந்திரமாக மாறும்நிலைக் காட்டப்படுகிறது. இயற்கை அழிக்கப்பட்டுச் செயற்கை வர்ணம் பூசிக்கொள்கிறது. ஆதித் தமிழனின் அடையாளம் மிக நுட்பமாய் மறைக்கப்படுகிறது. இது கவனம் கொள்ளவேண்டிய தருணமாக இக்கவிதையில் ஊடாடி நிற்கிறது. 

மழை நம் மீட்சி. உயிர் வாழ்தற்கான எத்தனிப்பு. மழைமேகம் கசியும் வெறுமொரு நிகழவில்லை. அது நம்மின் பிரதேசம். அசாத்திய மனிதினிசைவு. மழையில்லையென்றால் ஒவ்வொரு மனித மனமும் தனித்தலையும், அலைக்கழிக்கப்படும், வலியுணரும், நிம்மதியிழக்கச் செய்யும், நிலத்தின் பூரணமென்பது மழைதான். மழையில்லாததொரு கோடைக்காலம் “கோடையை விழுங்குதலாய்” கொதிநிலையில் பரந்துபட்ட வாழ்க்கையின் கொடூரத்தை உள்ளாக்கி நிற்கின்றது. மழையில்லாத வாழ்வின் அவலம், வேதனைப் பொழுது, கொடும் வியர்வையில் நனைதல், நீரில்லாத சூழலின் தன்மை ஆராயப்படுதல், கொடும் வெப்பம் தாளாத முதியவன், நீரிற்காக அனைவரும் காலத்தோடு போரிடும் நியதி இதெல்லாம் கடும் கோடையையும், நீரின்றித் தவித்தலையும் மக்களையும்,நீர்த்துளிகளை ஒன்றாக்கிச் சேர்க்காத அரசியலையும் சாடுவதாய் உள்ளது. அடிப்படைத் தேவையின்றி அர்ப்பணம் செய்து கொண்டு வாழும் மக்களின் நிலை, அவர்களின் தள்ளாட்டம், இவையெல்லாம், 

இருளில் நடக்கும் சிறுமியாக 
மிகக் கவனமாய் அடியெடுத்து 
நகரக் கூடிய காலம் 
வேனல் தாங்காமல் 
நீர்தேடி நொண்டுகிறது 

என்பதில் ஆழப் பொதிந்துள்ளது. இப்படி மனிதர்களுக்குள் உள்நுழைந்து, காலந்தோறும் மாறிக் கொண்டேயிருக்கும் எல்லா நிலைகளையும் அசலாகக் கடந்து செல்லும் பேருண்மைகள் ஸ்டாலினின் கவிதைகள். இங்குப் பயணிப்பவர்கள் அனைவருக்கும் காணும் காட்சியே பிரதானம். அந்தக் காட்சியே மனிதர்களின் வாழ்வியலை முன்னிறுத்துகிறது. ஆண், பெண்ணிற்கான புரிதல், ஊடாடிநிற்கும் காமம், மிகைப்படுத்தா அன்பு போன்ற அகக் கூறுகளும் அழகாய்க் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கவிதை நூல் அரசியல், சமூகம், காமம் என்ற மூன்று நிலைகளில் செறிவாய் ஊஞ்சலாடுகிறது. சில இடங்களில் மிக வேகமாய், சில இடங்களில் மிதமான வேகமாய், சில இடங்களில் மயக்கம் தரும் வேகமாய் என்ற சாராம்சத்தோடு நூல் முழுவதும் ஊடாடுகிறது சொல்லாட்சி. குறிப்பாகச் சொல்லப்போனால், அரசின் ஆதிக்கக் கைப்பிடியில் எச்சமாக வாழும் மனிதக்கூட்டம், அவர்களின் பாதிப்புகள், வாழ்க்கை முறை, குற்றத்திற்கான வழித்தடம் மனிதர்களின் அறியாமை, சமூகப் புறக்கணிப்பு, சமூகத்திலிருந்து அன்னியமாய்ப் பிரிக்கப்படுதல் போன்றவை ஆற்றாமையாய் நின்றொழுகுகின்றன. நிலத்தில் முழு வாழ்வையும் செருகி அதனின்றி ஒன்றுமில்லையெனச் சொல்வது வசீகரம். அகமின்றி மனிதரேது? என்ற பார்வையும் அநாயசம் தான். வாழ்வின் சிக்கல்களை ஆழ்ந்த அக்கறையுடன் கவிதையின்வழி தீர்க்கமாக, தெறித்து விழுதலைப் போலத் துக்கம், இன்பம், ஏக்கம், வெறுமை, ஏமாற்றம் போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் உள்ளக்கிடக்கிலிருந்துக் கொட்டித் தீர்த்துள்ளார். அது வெறும் தோற்ற மயக்கமன்று. 

உண்மையின்பாற் கண்டடைந்த சமூக செயல் மயக்கம் தான். அது தெரிந்துக்கொள்ளும் வகையில் காத்திரமான மனித மனங்களை எளிமையாகப் பற்றிக் கொள்ளும் விவரணைகளாக நம்முன் நிற்கின்றது கவிதைகளாய். அதுவே ரொட்டிகளை விளைவிப்பவனின் தனிச்சிறப்பு.

Tuesday, 20 October 2020

சக்கரப் பற்களில் சிக்கிய வாழ்வு

(ரொட்டிகளை விளைவிப்பவன் நூலை முன்வைத்து நாராயணி சுப்ரமணியன் எழுதிய விமர்சனம் ஆகஸ்ட் 2020ல் யாவரும் இணையதளத்தில் வெளிவந்தது) 

 “பூமியில் ஒவ்வொரு புல்லும் மண்ணிலிருந்து தனக்கான உயிராற்றலைப் பெற்றுக்கொள்வதுபோல, மனிதனும் நிலத்தோடு வேர்விட்டு தனது வாழ்வையும் வாழ்வதற்கான நம்பிக்கையையும் பெற்றுக்கொள்கிறான்” என்கிறார் ஜோசப் கான்ராட் . இயற்கைக்கும் மனிதனுக்குமான இழுபறி தன் உச்சத்தை எட்டியிருக்கும் இக்காலகட்டத்தில் இயற்கை/நிலம்சார் எழுத்து என்பதே ஒரு அரசியல் செயல்பாடு. நில வர்ணனை, எப்போதோ இருந்த நிலம் பற்றிய ஏக்கக்கனவு, இப்போதைய பிறழ்ந்த நிலம் பற்றிய கையறுநிலை ஒப்பாரி என நிலம் சார்ந்த எழுத்துக்கள் எல்லாமே சமகால வாழ்வியலின், அதன் மீதான அரசியல் கறைகளின் அழுத்தமான பதிவுகள். பூஞ்சை மனசுள்ள அமைதி நிறைந்த பொக்லைனாக இருக்கட்டும், சக்கரப் பற்களில் விரல்களைக் கடிக்கிற நில இயந்திரமாகட்டும், நெஞ்சிலறைந்து எத்தனை அழுதாலும் நிலத்தை விட்டு வெளியேறாமல் பிடிவாதம் பிடிக்கின்றன. ஸ்டாலின் சரவணனின் கவிதைத் தொகுப்பு இந்த ஆக்கிரமிப்பின் மௌன சாட்சியாக அதை ஆவணப்படுத்துகிறது. கால்களைப் பறத்தலுக்குத் தந்தவர்களையும் இழுத்து நிலத்தில் நிறுத்துகிறது. 
அறம், பொருள், இன்பம் என்று இந்த நூலின் மூன்று பகுதிகளை மிகத் தளர்வான பகுப்புகளுக்குள் வைக்க முனைகிறேன். முதல் பாகம் யவனிகா ஶ்ரீராமுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. வயல் ஓரத்தில் மருதத்தின் மதியங்களில் சுழலும் தூக்கத்தோடும் கனவுகள் அறுந்த துயரோடும் பேசிக்கொண்டிருக்கும் ஒருவனை இது முன்வைக்கிறது. இயந்திரங்கள் மீதான மனிதர்களின் பார்வையையே ஒரு பெரிய வரலாறாக எழுதலாம். புதிய ஒரு கருவியைக் கண்டதும் வருகிற வெளியாரச்சம் (Xenophobia), பழகியபின் அது வேலைகளை முடிக்கும் அசுரவேகம் கண்டு வரும் பரிவும் இளைப்பாறுதலும், அது தன்னை மீறியும் செயல்படக்கூடும் என்று உணரும் போது வரும் மீள் அச்சம் ஆகியவை எல்லா பெரிய இயந்திரங்களுக்கும் பொருந்திப்போகும். "அது வெறும் இயந்திரம் : It is just a machine" என்பது எவ்வளவு ஒரு அடர்த்தியான வாக்கியம் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது. அப்படி எளிதாகப் புறந்தள்ளப்பட்ட இயந்திரங்களைக் கழுத்தில் கட்டிக்கொண்டேதான் மெதுவாக முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். ருட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling) எழுதிய இயந்திரங்களின் ரகசியம் (The secret of the machines) கவிதை நினைவுக்கு வருகிறது. யோசித்து முடிக்குமுன் உணர்வுகளற்ற பொக்லைன் இன்னுமொரு சிற்றிலைச் சிதைக்கிறது. 

நிலத்தால் கைவிடப்பட்டவர்களும் நிலத்தைக் கைவிட்டவர்களாலும் காகங்களை மட்டுமே தூது அனுப்ப முடிகிறது. திணை கடந்த உறவில் பாலைவனத்தில் முயங்குபவனைக் கண்டு சூரியனே திகைத்தோடுகிறது. பரோட்டாக் கடையில் வேலை செய்யும் விவசாயிக்காக நிலமே வெடித்துக் கதறுகிறது.. அதிகாரத்தாலோ இயற்கையின் கையறு நிலையாலோ நிலத்திலிருந்து துரத்தப்பட்டவர்களின் அலைக்கழிப்பு என்றும் தீர்வதேயில்லை. நினைவில் நிலமுள்ள மிருகங்களாக, வறிய நாவுகளோடே வாழ்வின் இறுதிவரைக்கும் திரிய விதிக்கப்படுகிறார்கள். இந்த அலைக்கழிப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றன இந்தக் கவிதைகள்.

பச்சை நிறக் குழல் விளக்குகள் எரிகிற, ஆண்கள் நிறைய புழங்குகிற சாலையோர பரோட்டாக் கடைகள் பல கேள்விகளை, தீராக் கவர்ச்சியை, கண்ணுக்குத் தெரியாத பயத்தைத் தந்தபடியே இருக்கின்றன. பொதுவாகப் பெண்கள் அதிகம் நுழையாத அவ்விடங்களில் என்ன பேசிக்கொள்வார்கள், ஏன் வெள்ளை நிறத்திலல்லாமல் இங்கே பச்சை நிற விளக்குகள் எரிகின்றன என்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து யோசித்திருக்கிறேன். குடிக்காதவனுக்குக் கூடக் காரம் தூக்கலாக மட்டுமே ஆம்லேட் கிடைக்கும் இடம் என்ற ஒரு புதிய புரிதலைத் திறந்துவிடுகிறது "காரம் நிமித்த இரவுகள்" கவிதை. மூன்றாவது வார்டில் செவிலியரிடம் இறைஞ்சுபவர்கள் இந்தக் கடைகளின் மிளகாய்ச் சீவலுக்குத் தன் மிச்சசொச்ச குடலையும் பொத்தலிடுவதற்கென்றே அர்ப்பணிக்கிறார்கள். குடிநோயாளியாக ஒருவனை மாற்றுகிற சமூகம் தனது இறுதி வன்முறையை மிளகாயின்வழி ஏவுகிறது. 

ஒழுங்கற்றவனின் வாழ்க்கை ஒன்றைப் பேசும் கவிதையில் குக்கரின் விசில் சத்தமே கலவிக்கான சங்கீதமாகிறது. ஒழுங்கானவர்களைக் கொண்டாடித்தீர்க்கும் சமுதாயத்தில் நாம் எல்லாருமே ஒழுங்கற்றவர்களாகத்தான் இருக்கிறோம். ஒழுங்கை மீறுகிற எல்லாரும் ஒரு பெரும் புரட்சி மனநிலையில் அப்படிச் செய்வதில்லை......கோடுகளை மீறுகிற மனம் ஒரு ஆட்டுக்குட்டியின் உற்சாகத்தில் துள்ளும். காலம் /விதிகள் ஆகியவை சார்ந்த நீண்ட மஞ்சள் கோடுகள் நிறைந்த சாலையில் வளைத்து வளைத்து வண்டி ஓட்டிக்கொண்டிருப்பவர்களைப் பற்றியும் யாராவது பேசவேண்டும்தானே! 

யூமா வாசுகிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிற இரண்டாம் பாகத்தில் கூழாங்கற்கள் சிதறிக்கிடக்கின்றன. மலைகளின் நீட்சியென அவை திக்குபவனின் வாய்க்குள் உருள்கின்றன. கொஞ்சமாகத் தண்ணீர் சிதறினால் நனையலாம் என்று குளத்தின் மேல்படிகள் காத்துக்கிடக்கின்றன. மருதத்திலிருந்து குறிஞ்சிக்குப் போய்விட்ட இந்தக் கவிதைகள் மலைகளைக் கீழிருந்து அண்ணாந்து பார்ப்பவை, மலையேற எத்தனிப்பவை,குளிர் இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கம்பளி போர்த்தியபடி வாழ்வை வாசிப்பவை. சென்ற பாகத்தில் காலில் படிந்த ஈரமண்ணைக் குளக்கரையில் அலசச் செய்பவை. அதே மலையின் உச்சியில் தேவன் இசைக்கிற குறிப்புகளுக்கு மகுடிப் பாம்பென தலையசைக்க வைப்பவை. கவிதைகளைப் படிக்கும்போதே யூகலிப்டஸ் வாசம் எங்கிருந்தோ வருவதுபோலிருந்தது. 

சமீபகாலமாகவே வெயிலோ மழையோ, விண்ணிலிருந்து கருணையென நம்மீது இறங்குவதில்லை. பருவகாலங்கள் ஒரு சாட்டையென நம் முதுகில் சொடுக்கப்படுவதைச் சொல்கிறது "வாளேந்திவரும் வேனிற்காலம்" என்ற வரி. நகரத்தின் கோடையும் கிராமத்துக் கோடையும் வேறு வேறானவை. நகரங்களின் கோடைகள் ஏனோ ஒரு கழிவரக்கத்தையும் சுயவாதை மனப்பான்மையையும் கூடவே கொண்டுவருபவை. கோடைக்கும் அவனுக்கும் நிரந்தரமாய் நடக்கும் யுத்தத்தில் அவனது ஒரே ஆயுதம் ஒரு ஈரத்துண்டு. கோடை வென்றுவிடுகிறது என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா? எழுதுவதைப் பாதியில் நிறுத்திவிட்டு மின்விசிறியின் வேகத்தை அதிகரித்துக்கொள்கிறேன்.

 "ஒரு குவளை தனிமை" பேசும் தனிமை பற்றித் தனியாகக் கட்டுரையொன்று எழுதவேண்டியிருக்கும். "யாருமே எப்போதுமே வேண்டாம்" என்ற தனிமையைத்தான் மன நோய் என்கிறது மருத்துவ உலகம். ஆனால் தீங்கற்று, "அவ்வப்போது யாரேனும் இருந்தால் போதும், மற்றபடி விட்டுவிடுங்கள்" என்று கேட்கிறவனின் கையைப் பிடித்துத் திருகிக்கொண்டேயிருக்கிறது சமூகம். "எல்லாரும் எப்பவும் ஒண்ணா இருந்தாதான் சந்தோஷம்" என்கிற வார்த்தைகளை நம் வீடுகளின் கொடிகளில் பதித்துவைத்திருக்கிறோம். தனிமையை வேண்டுபவனை அன்பை நிராகரிக்கிற குரூரன் என்று அழைக்கிறோம். விலகி விலகி வாழ்வுக்குள் இயல்பாய்த் திரும்ப விரும்புகிற மனிதனுக்கும், வாசற்படியை நோக்கிக் கால்கள் திரும்பினாலே அலறிப் பதறுகிற சமூகத்துக்கும் நடக்கிற இழுபறியை நினைவுபடுத்துகிறது இந்தக் கவிதை. 

ரமேஷ்-ப்ரேமுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிற மூன்றாவது பாகம் பற்றியெரிகிற நெருப்பின் வேகத்துடனும், சிலசமயம் ரொட்டியின்மீது பூஞ்சை படரும் நிதானத்துடனும் வாழ்வைப் புணர நினைப்பது. அன்பு/காதல் என்பது பலவண்ணப் பட்டுநூல்களின் சிக்கல். காமமோ அளவுகோல் வைத்து வரையப்பட்ட வெள்ளைக் கோடு. இந்த இருமையையும் அதனால் வரும் இருண்மையின் அலைக்கழிப்புகளையும் எதிரொலிக்கின்றன இந்தக் கவிதைகள். கண்களைத் தாண்டாத பார்வை நட்புக்குத்தான் சரிவரும். காதலோ கண்களுக்குள்ளேயே தொலைந்துவிடுகிறது. கால் கட்டைவிரலின் உடைந்திருக்கும் நகத்தையும் பாவாடை கட்டி இறுகிய வளையத்தையும் ரசிக்கிற கண்கள் காமத்துக்கே வாய்க்கின்றன. ஈரம் சொட்டும் கூந்தல் நுனியோடுதான் காமத்தின் தாகம் முழுமையாகத் தீர்கிறது. அருவருப்புகளைக் கட்டுடைக்கும் "சீழ் மணக்கும்" காதல் காயங்களை விரல்நகத்தால் சுரண்டியபடி ஒற்றை முத்தத்துக்கெனக் காத்திருக்கிறது. சுமந்து செல்லவேண்டிய எடையை எண்ணி அலுத்துக்கொள்ளும் அதே காதல்தான் அவள் கையில் மீனென அறுபடவும், கொதிக்கும் குழம்பில் துள்ளி அவளிடம் பின்மண்டையில் அடிவாங்கவும், உயிர் உருகும் கோழியென அவளுக்கு பலியாகவும் தயாராக இருக்கிறது.மொத்த வாழ்வையும் ஒரு தட்டில் வைத்து ஒப்படைக்கும் பித்து நிலைக்கும் நினைவுகளை அறுக்கத் துடிக்கிற கத்திக்கும் இடையில் ஊசலாடுகின்றன இக்கவிதைகள். 

இரவாட்டம் கவிதையில் கூட்டுக்குடும்பங்களிலும் ஒண்டுக்குடித்தனங்களிலும் போர்வைக்குள் மகிழ்ந்திருப்பவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். பெய்கின்ற மழை, சரசரவென்று எரிகின்ற நெருப்பு, படர்கின்ற இருள், நீர்க்குமிழியிலிருந்து உடைந்து பூமிக்குள் விழும் யாக்க, என பலவிதமாக விளையாட்டுக்காட்டுகிறது காமம். நாக்கு நீளமான ஞாபகங்கள் பெருவெளியில் துரத்துகின்றன; காமம் கண்மூடி தியானித்திருக்கிறது. அருகில்போய்த் தொட்டு எழுப்பினால் கண்ணடித்துச் சிரிக்கிறது. பெரும் பயணம் ஒன்றுக்கு அழைக்கிறது. உடலைக் கொண்டாடுவதற்கும் விரசத்துக்கும் இடையிலான கண்ணுக்குத் தெரியாத ஒரு கோட்டில் பயணிக்கின்றன ஸ்டாலின் சரவணனின் வரிகள். 

 "சிறு குறிப்பு வரைக" பகுதி பற்றியும் கவிதைகளின் தலைப்பைப் பற்றியும் நிச்சயம் பேசியாகவேண்டும். உரைநடையின் வடிவத்தில், ஆனால் கவிதை நடையில் எழுதப்படுகிறவற்றை ஆங்கிலத்தில் Prose Poem என்பார்கள். ஆங்கிலத்தில் நவீன கவிதைகளை எழுதுகிற எல்லோருடைய தொகுப்பிலும் இப்படிப்பட்ட நீண்ட பத்தி ஒன்றாவது உண்டு. சிறுகுறிப்பு வரைக பகுதியில் இருக்கும் வரிகளை அப்படி ஒரு Prose Poem இடத்தில் வைக்கலாம்தான். ஆனால் அப்படிச் செய்தால் அவற்றின் புதுமை கொஞ்சம் மட்டுப்பட்டுவிடும். அதனாலேயே அவற்றை வேறு பெயரிட்டு அழைக்க நினைக்கிறேன். இவற்றுக்குக் கவிதைத் தெறிப்புகள் என்று பெயரிடலாம். இரண்டு மூன்று வரிகளில், வடிவங்கள் பற்றிய கவலையின்றி ஏதோ ஒரு கவிதை மலரென அவிழ்கிற தருணத்தை ஒரு ஸ்க்ரீன்ஷாட் (Screenshot) போன்று பதிவு செய்திருப்பவை அவை. தோளில் ஏறிக்கொள்கிற "எக்ஸ்"ஸின் மகளிடம் அவளது அக்குள் வாசனையை உணர்வது தொடங்கி ஆரஞ்சுப் பழமென வாழ்க்கையைக் கவிதையில் உரித்து வைக்காதீர்களேன் என்று கெஞ்சுவது வரை சிறுகுறிப்புகள் எல்லாவற்றையும் எழுதிப்பார்க்கின்றன. கவிதையின் வடிவம் பற்றிய நம் முன்முடிவுகளை ஒதுக்கிவிட்டு இவற்றை அணுகவேண்டும்.

கவிதைகளுக்கும் தலைப்புகளுக்குமிடையே சிற்பத்தின் கால் பாதத்துக்கும் பீடத்துக்குமிடையே இருக்கிற சின்ன ஈர்க்குச்சி நுழையும் இடைவெளியொன்று. எழுதப்படாத வரிகள் அதற்குள் தாமாகவே வந்து அமர்ந்துகொள்கின்றன. தலைப்புகளே கவிதைகளாக மாறத் தயங்கி நின்றுகொண்டிருக்கும் சொற்கள்தான். மனதுக்குப் பிடித்த ஒருவர் பிடித்த நிறத்தில் ஆடையையும் அணிந்து வருவதுபோன்ற ஒரு கூடுதல் அழகியலை அவை தோற்றுவிக்கின்றன. "செம்புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி", "கட்டமிட்ட சட்டையில் பூ அலர்ந்த வாழ்வு", "உன் ஞாபகத்துக்கு நாக்கு கொஞ்சம் நீளம்தான்" ஆகியவை சில உதாரணங்கள். 

ஒரு கவிதையில் "நீங்கள் மட்டும் உச் கொட்டி 'வாழ்க்கையென்பது' என்று ஆரம்பிக்காதிருந்தால் போதுமானது" என்ற ஒரு வரி வருகிறது. "வாழ்க்கையென்பது" என்று பிரச்சாரம் செய்யாத, முன்முடிவுகளை உடைக்கிற, இறுதி முடிவுகளை நம்மிடமே விட்டுவிடுகிற கவிதைகள் இவை. அட்டைப்பட ஓவியம் கஸ்டாவ் க்ளிம்ப்ட்டின் தனித்துவமான, பாராட்டுகள் குவிந்த Golden Phaseன் போது வரையப்பட்டதாம். இந்தத் தொகுப்பின்மூலம் தனக்கான தங்கத்துகள் மிதக்கிற பாதைக்குள் ஸ்டாலின் சரவணன் பயணிக்கத்தொடங்கிவிட்டார் என்றே தோன்றுகிறது.